top of page
Search

சார்புணர்ந்து சார்பு கெட ... 359, 07/02/2024

07/02/2024 (1068)

அன்பிற்கினியவர்களுக்கு:

மெய்ப்பொருளை அறிய  கேட்டல், சிந்தித்தல், தெளிதல் (குறள் 356, 357, 358) என்ற மூன்று படி நிலைகள் என்றும் அவற்றைக் கடந்தால் நிட்டைக் கூடுதல் என்றும் பார்த்தோம். நிட்டை என்பது மன அமைதி பெறுதல். மனம் அமைதி அடைந்தால் அனைத்தும் நிகழும்.

 

சைவ மரபில் அறிவுசார் கருத்துகளை விளக்கியவர்களைச் சந்தான குரவர்கள் என்று வழங்குவார்கள். சந்தான குரவர்களுள் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் பெருமான், சிவப்பிரகாசம் என்னும் நூலில், மெய்ப்பொருளைக் காண நம் பேராசான் சொல்லும் அதே நான்கு படி நிலைகளை விளக்குகிறார். இவரின் காலம் 14 ஆம் நூற்றாண்டு என்று சொல்கிறார்கள்.

 

14 சைவ சித்தாந்த சாத்திர நூல்களுள், ஏழாவது நூலாகப் போற்றப்படுவது சிவப்பிரகாசம். இந்த நூலுக்கு முதல் நூல் சிவஞான போதம். வழி நூல் சிவஞான சித்தியார். சிவப்பிரகாசம் சார்பு நூல் என்பர். இந்த நூலில் 83 ஆவது பாடலில்

 

மனது ஒருமையிலே நிற்கின்ற பக்குவம் அடைந்தால் ஆசிரியர் தோன்றுவார். ஆசிரியர் தோன்றி உண்மைப் பொருளைச் சொல்லுவார். அதைக் கேட்டல் முதல் நிலை. அக்கருத்துகளைக் கேட்கக் கேட்க சிந்தனை நிகழும். அதன் பின்னர் தெளிவு பிறக்கும். இவை உள்ளுக்குள் நிகழ நிட்டைக் கூடும். இதுவே முத்தி (முக்தி).

 

முந்திய ஒருமை யாலே மொழிந்தவை கேட்டல் கேட்டல்

சிந்தனை செய்தல் உண்மை தெளிந்திடல் அதுதா னாக

வந்தவாறு எய்த நிட்டை மருவுத லென்று நான்காம்

இந்தவாறு அடைந்தோர் முத்தி எய்திய இயல்பி னோரே.  – பாடல் 83; சிவப்பிரகாசம்

 

முத்தியைக் குறித்து முன்பே சிந்தித்துள்ளோம். புத்த பெருமானின் கருத்து என்னவெனில் ஆசைகள் ஏதுமில்லாமல் இந்த உலகத்தைப் பிரிவதுதான் முத்தி என்றார். காண்க 26/01/2024. இதுவே ஞானம்.

 

இது நிற்க.

 

நம்மாளு: ஐயா, சார் சார்ன்னு நம் பேராசான் இந்தக் குறளில் போட்டு இருக்காரே, சார்ன்னா என்ன சார்?

 

சார் என்றால் பற்று! சார்பு என்றால் பற்றிக் கொண்டிருத்தல். நம் மனம் எதனையாவது சார்ந்து கொண்டிருக்கும். அது உண்மையான உண்மையை அறிந்து கொண்டால் அந்தப் பக்கம் சாய்ந்து கொள்ளும் என்கிறார்.

 

பற்றற்றான் பற்றினைப் பற்றினால் பற்று அறும் என்றாரே அது போல! காண்க 01/02/2024.

 

உள்முகமாகப் பயணம் செய்யச் செய்ய உண்மை விளங்கும். உண்மைப் பொருள் விளங்கும். அதைச் சார்ந்து கொண்டால் மற்ற சார்புகள் கெடும், மறையும். துன்பம் தரா.

 

சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார் தரு நோய். – 359; மெய்யுணர்தல்

 

சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் = யான் எனது என்னும் பற்றுக் கோடுகளை உணர்ந்து அவற்றைச் சார்ந்து இருத்தலை விலக்கி நம் பாதையை அமைத்துக் கொண்டால்; சார் தரு நோய் அழித்து மற்று சார் தரா = முதலில் அந்த அந்தப் பற்றுகளால் வந்த துன்பங்கள் மறையும். மற்றும், எதனையும் சார்ந்து இருக்கும் நிலையும் இல்லாமலே போகும்.

 

யான் எனது என்னும் பற்றுக் கோடுகளை உணர்ந்து அவற்றைச் சார்ந்து இருத்தலை விலக்கி நம் பாதையை அமைத்துக் கொண்டால், முதலில் அந்த அந்தப் பற்றுகளால் வந்த துன்பங்கள் மறையும். மற்றும், முடிவில் எதனையும் சார்ந்து இருக்கும் நிலையும் இல்லாமலே போகும். அமைதி உண்டாகும்.

 

ஒய்வெடுக்கும் பருவத்தில் செய்ய வேண்டியது உள்முகத் தேடல். அவ்வளவே.

 

வாழ்வியலுக்கும் இந்த நான்கு படி நிலைகளே முக்கியம். 1. செய்ய வேண்டிய செயல்களை எவ்வாறு செய்வது என்பதனைக் கேட்டு அறிதல்; 2. பின் அவற்றைக் குறித்துச் சிந்தித்தல்; 3. எவ்வாறு செய்வது என்பதில் தெளிவு பெறுதல்; 4. பின்னர், வெற்றியை எட்டிப் பிடிப்பது. (நிட்டை).

 

இந்த நான்கைப் பற்றுங்கள். நாளைச் சந்திப்போம்.

 

நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Hozzászólások


Post: Blog2_Post
bottom of page