சீர்மை சிறப்பொடு ... குறள் 195
18/11/2021 (268)
பயனில்லாதவற்றை பலர் முன் பேசினால் இகழப்படுவான்; மேலும், அது தீமையையே விளைவிக்கும்; ஒருவன் விரும்பத்தக்கவனா இல்லையா என்பதை அவனின் பேச்சிலிருந்தே கண்டுபிடிக்கலாம்; அப்படியே, ஒருவன் தொடர்ந்து பயனில பேசிக்கொண்டிருந்தால் அவனிடமிருந்து நன்மைகள் நீங்கிவிடும் …
போன்ற கருத்துகளை, முதல் நான்கு குறள்களில், நம் பேராசான் சொல்லிக் கொண்டே வந்தார்.
அவருக்கு ஒன்று தோண்றியிருக்கும் போல. இது ஏதோ ஒரு கூட்டம் தனியாக இருக்கும். அவங்கதான் பயனில பேசுவாங்க, அவர்களின் நிலைதான் ரொம்பவே மோசமாகும் என்று நாம நினைத்து விடுவோமோ என்ற ஒரு ஐயம் வந்திருக்கு நம்ம ஐயனுக்கு.
அப்படியெல்லாம் இல்லை தம்பின்னு ஆரம்பிக்கிறார் அடுத்த குறளில்.
ரொம்பவே பண்பானவங்க, உயர்ந்தவங்க, நன்றாக மதிக்கப்படுபவர்கள், இனிய இயல்பு கொண்டவங்ககூட பயன் இல்லாதவற்றைப் பேசினால் அவர்களின் சிறப்பு, மதிப்பு அவர்களிடமிருந்து நீங்கிடுமாம். அவங்கதான் ரொம்பவே கவனமாக இருக்கனுமாம்.
உயர்ந்தவர்களை ‘நீர்மை உடையார்’ என்று சொல்கிறார். நீரின் இயல்பு எப்போதும் பள்ளத்தை நோக்கியேப் பாயும். அது போல, நீர்மை உடையவர்கள் எப்போதும் அருள் உள்ளம் கொண்டு தமக்கும் கீழே இருப்பவர்களை எப்படி உயர்த்துவதுன்னு சிந்திப்பாங்களாம்.
அப்படிப் பட்டவங்ககூட, பயனில பேசினால் அவர்களின் சீர்மை, மேன்மை அதனால் வந்த மதிப்பு, சிறப்பு அதுவும் போயிடுமாம்.
“சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்.” --- குறள் 195; அதிகாரம் – பயனில சொல்லாமை
நீர்மை உடையார் பயன்இல சொலின் = நீர்மை உடையார் பயன் இல்லாதவற்றைப் பேசினால்; சீர்மை சிறப்பொடு நீங்கும் = அவர்களின் மேன்மை, அதனால் வந்த சிறப்பும், உயர்வும் நீங்கிவிடும்.
கண்கூடாகவே பார்க்கிறோம். எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களும் அவர்கள் பயன் படுத்திய சில வார்த்தைகளால் ஒதுக்கப்படுகிறார்கள்.
கவனமாக இருக்கனும். பேசிய வார்த்தைகளை திரும்பப் பெற முடியுமா?
‘வைச்சு செய்கிறார்கள்’ என்று சொல்றாங்களே அதைப்போல அவர்களை நம்ம திருவாளர் பொதுஜனம் தாக்கு தாக்குன்னு தாக்குவார்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
