08/01/2024 (1038)
அன்பிற்கினியவர்களுக்கு:
“யாம்” என்று நம் பேராசான் தம்மை முன்னிலைப்படுத்திச் சொன்ன குறள்கள் இரண்டு. இந்த இரு குறள்களையும் முடிந்த முடிவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
புதல்வரைப் பெறுதலில், யாம் அறிந்தவரையில் அறிவறிந்த மக்களைப் பெறுவதைவிட பெரும் பேறு மனிதர்களுக்கு இல்லை என்றார். காண்க 07/03/2021.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற. – 61; - புதல்வரைப் பெறுதல்
அடுத்து, வாய்மையில், தாம் பார்த்தவரையில், அல்ல, அல்ல! யாம் உண்மையிலும் உண்மையாகக் கண்டவற்றுள் வாய்மையைப் போல ஒரு நல்ல பண்பு இல்லை என்கிறார். காண்க 25/01/2021.
யாம்மெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. – 300; - வாய்மை
வாய்மையை அடுத்து வெகுளாமை. இந்த அதிகாரத்தில் உள்ள குறள்களை நாம் ஏற்கெனவே சிந்தித்துள்ளோம்.
வெகுளாமையைத் தொடர்ந்து இன்னா செய்யாமை. இன்னா என்றால் துன்பம், தீங்கு, இகழ்ச்சி, வெறுப்பு என்றெல்லாம் பொருள்படும். சுருக்கமாக பிற உயிர்க்குத் தீங்கு செய்யாமை.
கோபத்தின் நீட்சியாக இன்னா செய்தல் நிகழும் என்பதனால் வெகுளாமையைத் தொடர்ந்து இன்னா செய்யாமை.
இரு குறள்களைச் “சிறப்புஈனும்” என்று தொடங்குகிறார். ஒன்று - அறன் வலியுறுத்தலில்
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. – 31; அறன் வலியுறுத்தல்
அறச் செயல்களைப் போல சிறப்பினையும் செல்வத்தினையும் தருவது ஏதுமில்லை என்றார். காண்க16/02/2021. அறம் என்றால் மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்றார் குறள் 34 இல். காண்க 15/02/2021.
இரண்டாவது, இன்னா செய்யாமையில் முதல் குறளில் “சிறப்புஈனும்” என்று தொடங்குகிறார்.
இங்கே அறமல்லாதவற்றைக் குறிக்கிறார். அஃதாவது, பிற உயிரைக் கசக்கி, நசுக்கித் தமக்குச் சிறப்பு ஈனும் செல்வங்களைப் பெறுவதைக் குறிக்கிறார்.
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள். – 311; - இன்னா செய்யாமை
சிறப்பீனும் செல்வம் பெறினும் = பிற உயிரைக் கசக்கி, நசுக்குவதால் தமக்குச் சிறப்பு ஈனும் செல்வங்கள் வரலாம் என்றாலும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள் = அது போன்றத் தரமற்றச் செயல்களைச் செய்யாமல் இருப்பதையே தங்கள் கோட்பாடாக வைத்துக் கொள்வார்களாம் மனத்துக்கண் மாசு அற்றார்.
பிற உயிரைக் கசக்கி, நசுக்குவதால் தமக்குச் சிறப்பு ஈனும் செல்வங்கள் வரலாம் என்றாலும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள் = அது போன்றத் தரமற்றச் செயல்களைச் செய்யாமல் இருப்பதையே தங்கள் கோட்பாடாக வைத்துக் கொள்வார்களாம் மனத்துக்கண் மாசு அற்றார்.
பிற உயிரைக் கசக்கி, நசுக்குவதால் தமக்குச் சிறப்பு ஈனும் செல்வங்கள் வரலாம் என்றாலும், அது போன்றத் தரமற்றச் செயல்களைச் செய்யாமல் இருப்பதையே தங்கள் கோட்பாடாக வைத்துக் கொள்வார்களாம் மனத்துக்கண் மாசு அற்றார்.
இதுவும் வாய்மையில் அடங்கும். அதனால்தான், வாய்மையைப் போன்று யாம் மெய்யாக் கண்டவற்றுள் ஏதும் இல்லை என்றார்.
இன்னும் இரண்டு குறள்களில் “மாசற்றார் கோள்” என்று நிறைவு செய்கிறாராம். நாளைப் பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント