28/11/2022 (634)
“_______ கட்டத்திலே நல்லா உட்கார்ந்துட்டான். இனிமே உங்களுக்கு கவலையில்லை. யாரும் அசைக்க முடியாது” என்று சோதிடம் பார்க்கும் அன்பர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.
அவங்க அவங்களுக்கு உரிய இடத்தில் பொருந்தியிருப்பதே ஒரு பலம்தான்!
பகைவர்களும் அவர்களுக்கு உரிய இடத்தில் பொருந்தி இருப்பார்களானால் அவர்களை வெல்வது அரிது என்கிறார்.
அந்தப் பகைவர்களுக்கு பெரிய கோட்டை மதில்கள் இருக்காது; பெரும் படைகள் இருக்காது. என்றாலும், அவர்கள் இருக்கும் இடம் அவர்களுக்கு பெரும் பாதுகாப்பாக இருக்குமாயின் அவர்களின் இடத்திற்கு சென்று அவர்களைத் தாக்குவது எளிது அல்ல.
அதாவது: கட்டம், கட்டம் முக்கியம். நல்ல பாதுகாப்பான இடத்தில் பொருந்தியிருக்கனும். அதுவே நம் எதிரிகளுக்கு ஒரு தயக்கத்தை ஏற்படுத்தும்.
“சிறைநலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தோடு ஒட்டல் அரிது.” --- குறள் 499; அதிகாரம் – இடனறிதல்
ஒட்டல் = தாக்குவது, ஒட்ட நறுக்குவது; மாந்தர் = மாற்றார் (யாராக இருந்தாலும் என்ற பொருள்படும்படி மாந்தர் என்று குறிக்கிறார்)
சிறைநலனும் சீரும் இலர் எனினும் = பாதுக்காப்பான கோட்டை மதில்கள், பெரும் படைகள் (அவர்களுக்கு) இல்லை என்றாலும்;
மாந்தர் உறை நிலத்தோடு ஒட்டல் அரிது = மாற்றார் தங்களுக்கு உரிய இடத்தில் பொருந்தி இருக்கும்பொது அவர்களைத் தாக்குவது அரிது (அதாவது எளிதான காரியம் அல்ல)
அது ஏன் என்றால், அவர்கள் செத்து மடியவும் துணிவார்களே தவிர அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற நினைக்க மாட்டார்கள். அதனால், அவர்களின் துணிவு மிக, மிக அதிகமாக இருக்கும். அது பெரும் படையையும் தடுமாற வைக்கும் என்கிறார் பரிமேலழகப் பெருமான்.
இதுதான் கொரில்லா போர்முறை. உதாரணம்: அண்மையில் நிகழ்ந்த அமெரிக்க – வியட்னாம் யுத்தம்.
சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்மட்டு!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments