top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

சிறுமை நமக்கொழிய ... 1231, 27/03/2024

27/03/2024 (1117)

அன்பிற்கினியவர்களுக்கு:

கவலை என்பது உடலை உள்ளத்தை அரிக்கும் ஒரு நோய். கவலையினால் ஆவதொன்றில்லை. இருப்பினும் நாம் கவலைப்படாமல் இருப்பதில்லை.

 

ஏதோ ஒன்றிற்காக நாம் கவலைப்பட்டுக் கொண்டே இருப்போம்!

 

அவளின் கவலை அவனைக் குறித்து. அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை இருந்தாலும், அவன் இப்போதே வந்துவிட மாட்டானா என்பது அவளின் கவலை.

 

அவளின் கவலையால் அவளின் உறுப்புகளின் நலம் கெடுவதைப் பாட்டில் வடிக்கிறாள். அவனைக் காண விரும்பும் கண்கள், அவன் சாய்ந்திருந்த அவளின் தோள்கள், அவளை உச்சி மோர்ந்து முத்தமிட்ட நெற்றி உள்ளிட்ட உறுப்புகளின் நலம் குன்றுவதாகச் சொல்கிறாள்.

 

இது நிற்க.

 

“ஒழிய” என்ற சொல்லைப் பார்ப்போம்.

 

1.     “ஒழிய” என்ற சொல் இரு வாக்கியங்களை இணைக்கும் விதத்தில் தவிர என்று பொருள்படும்படி வரும் ஒரு இடைச்சொல்லாக வரும்.

 

எடுத்துக் காட்டு:

 

நான் படுத்திருந்தேன்; உறங்கவில்லை.

நான் படுத்திருந்தேனே ஒழிய உறங்கவில்லை. ஒழிய = தவிர

 

மழை பெய்தது; வெப்பம் தணியவில்லை.

மழை பெய்ததே ஒழிய வெப்பம் தணியவில்லை. ஒழிய = தவிர

 

2.     “ஒழிய” என்ற சொல் நிபந்தனை வாக்கியத்திலும் இடைச்சொல்லாக வரும்.

 

எடுத்துக் காட்டு:

நீ சொன்னால் ஒழிய அவன் தர மாட்டான்.

நீ சொல்லாமல் அவன் தரமாட்டான். ஒழிய = அல்லாமல்

 

சொல்கள் நால்வகை என்று நமக்குத் தெரியும். அவையாவன, பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல்.

 

இடைச் சொல்லாவது, பெயர்ச் சொல்கள் போலவும் வினைச் சொல்கள் போலவும் தனித்து வராமல், அவற்றோடு சேர்ந்து வருவது.

 

ஒழிய, போல, போன்ற, உம், ஐயோ, அம்மா, அந்த, இந்த, எந்த, என்பன எல்லாம் இடைச் சொல்களேயாகும். வேற்றுமை உருபுகளும் இடைச் சொல்களே.

 

இது நிற்க.

 

நம்மாழ்வார் பெருமான் அருளிய திருவாய்மொழியில் இருந்து ஒரு பாடலைப் பார்ப்போம். இந்தப் பாடல்கள் அந்தாதி செய்யுள் வகையைச் சார்ந்துள்ளன. அந்தாதி குறித்து நாம் முன்பே சிந்தித்துள்ளோம். காண்க 19/10/2021.

 

உளனாக வேஎண்ணித் தன்னைஒன் றாகத்தன் செல்வத்தை

வளனா மதிக்கும்இம் மானிடத் தைக்கவி பாடிஎன்

குளன்ஆர் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே

உளன்ஆய எந்தையை எந்தைபெம் மானை ஒழியவே? – மூன்றாம் பத்து; ஒன்பதாம் திருவாய்மொழி – பாடல் 2 (பாடல் 3210, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்)

 

குளங்கள் நிறைந்திருக்கின்ற கழனிகள் சூழ்ந்துள்ள இடம் அகன்ற நல்ல குறுங்குடியில் எளிமையே உருவாகிய எந்தையை எந்தைக்குப் பெருமானை ஒழிய, தன்னை உள்ளவனாகவே கொண்டு ஒரு பொருளாக எண்ணித் தன் செல்வத்தை மிக உயர்ந்ததாக மதித்திருக்கும் இம்மானிடத்தைக் கவி பாடுவதால் பயன் யாது?

 

ஆக, ஒழிய என்றால் தவிர, அல்லாமல்.

 

சரி, நாம் குறளுக்கு வருவோம்.

 

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண். – 1231; - உறுப்பு நலன் அழிதல்

 

சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி = எல்லாரும் எள்ளும் சிறுமையை நமக்கு அளித்ததோடு அல்லாமல் நம்மைவிட்டுத் தொலைத் தூரம் பிரிந்து சென்றவரை எண்ணிப் பார்த்தும்; கண் நறுமலர் நாணின = கண்ணே நீ,  இதோ அழகாகப் பூத்துக் குலுங்கி மனம் வீசிக் கொண்டிருக்கும் மலர்களை எடுத்துச் சூடிக் கொள்ள முடியவில்லையே என்றும் கூனிக் குறுகிறாய்.

 

எல்லாரும் எள்ளும் சிறுமையை நமக்கு அளித்ததோடு அல்லாமல் நம்மைவிட்டுத் தொலைத் தூரம் பிரிந்து சென்றவரை எண்ணிப் பார்த்தும், கண்ணே நீ,  இதோ அழகாகப் பூத்துக் குலுங்கி மனம் வீசிக் கொண்டிருக்கும் மலர்களை எடுத்துச் சூடிக் கொள்ள முடியவில்லையே என்றும் கூனிக் குறுகிறாய்.

 

அறிஞர் பெருமக்களின் உரைகளையும் பார்ப்போம்.

 

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்: தோழி சொல்லியதாகப் பொருள் எடுக்கிறார்.

(ஆற்றாமை மிகுதியால் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.)

இவ்வாற்றாமை நம்மிடத்து நிற்கத் தாம் தொலைவிற்குச் சென்ற காதலரை நினைத்து நீ யழுதலால், உன் கண்கள் ஒளியும் அழகும் இழந்து, முன் தமக்கு நாணிய நன்மண மலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.

இவை கண்டார் காதலரைக் கொடுமை கூறுவர். ஆதலால் நீ யாற்றல்வேண்டு மென்பது கருத்து. நீ யுள்ளிக் கண் நாணின என்பது தனிநிலைமுடிபாம் (absolute construction.)

 

பரிமேலழகப் பெருமானின் உரையும் இவ்வாறே.

 

பேராசிரியர் சாலமன் பாப்பையா: அவளின் கூற்றாகச் சொல்கிறார்.

பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.

 

காமத்துப் பாலில் உள்ள பாடல்களில் புதுப் புதுச் சொல்கள். பலப் பலக் கோணங்கள்!

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




 

Comments


bottom of page