22/08/2022 (541)
பெரியாரைத் துணைக்கோடல் (98 ஆவது) எனும் அதிகாரத்தில் பெரியோர்களைத் துனைக்கு வைத்துக் கொள்வதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அதிலே நாம் பார்த்த ஒரு குறள்:
“அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.” --- குறள் 443; அதிகாரம் - பெரியாரைத் துணைக்கோடல் அரியவற்றுள் எல்லாம் = சிறந்த/அரிய பேறுகள் எல்லாவற்றையும் விட; அரிதே = சிறப்பானதே. பெரியாரைப்பேணி = கற்றறிந்த சான்றோர்களை காத்து; தமரா = தமக்கு வழிகாட்டுபவராக. நெருங்கிய சொந்தமாக; கொளல் = வைத்துக்கொள்ளுதல் ஆகும். தமர் = உற்றார், சிறந்தோர், தம்மவர்
அது தலைமையில் இருப்பவர்களுக்கு ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என ‘அங்கவியல்’ எனும் இயலில் அமைத்திருந்தார்.
இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ‘பெருமை’ அதிகாரம் ஒழிபியலில் அமைந்துள்ளது. அதுவும், குடிமை, மானம், பெருமை என்ற அதிகார முறைமையில் அமைந்துள்ளது. இது குடியை உயர்த்த வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கெல்லாம் சொல்லப்பட் டது.
அறிவு, உணர்ச்சி இந்த இரண்டும்தான் நம்மைச் செலுத்தும் பெரும் காரணிகள். பெரும்பாலும், எதிலும் உணர்ச்சியே வெல்லும்! ஆகையால், உணர்ச்சியை கட்டுக்குள் வைப்பது அவசியமாகிறது. இது நிற்க.
“சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு.” --- குறள் 976; அதிகாரம் – பெருமை
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு = தத்தம் துறையில் உயர்ந்து நிற்போர்களைப் போற்றி துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பார்வை;
சிறியார் = தத்தம் குடியை உயர்த்த வேண்டும் என்று எண்ணம் இல்லா சிறியார்கள்;
சிறியார் உணர்ச்சியுள் இல்லை = அச் சிறியார்கள் உணர்வதில்லை.
தத்தம் துறையில் உயர்ந்து நிற்போர்களைப் போற்றி துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பார்வையை, தத்தம் குடியை உயர்த்த வேண்டும் என்று எண்ணம் இல்லா சிறியார்கள் உணர்வதில்லை.
ஆகையால், பெரியோர்களைத் துணைக்கு இருத்திக் கொள்வது தனக்கும், தலைமைக்கும் மட்டுமல்லாமல் நம் குடிக்கும் மிகவும் தேவையாகிறது.
அது எப்படி சாத்தியப்படும்? இந்தக் கேள்விக்கும் பதில் சொல்கிறார் நம் பேராசன் அடுத்து வரும் குறள்களில்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments