top of page
Search

சுற்றந்தழால் ... 796

17/12/2022 (653)

தெரிந்து தெளிதல் (51ஆவது அதிகாரம்), தெரிந்து வினையாடல் (52), அதனைத் தொடர்ந்து சுற்றந்தழால் (53) அமைத்துள்ளார்.


‘சுற்றந்தழால்’ என்றால் என்னவென்று ஏற்கனவே சிந்தித்துள்ளோம். காண்க 28/04/2021, 06/12/2021.

சுருக்கமாக:

நட்பு இருவகைப்படும். அவையாவன: இயற்கை, செயற்கை அதிலே, இயற்கை நட்பு என்பது, பிறப்பு முறையால் வருவது என்றும், ஊர் சம்பந்தத்தால் வருவது என்றும் பரிமேலழகப் பெருமான் வகுக்கிறார். பிறப்பு முறையால் வரும் நட்பு என்பது சுற்றமாகும். இதனை நாம் தேர்ந்து எடுக்க முடியாது. இருப்பினும் சுற்றத்தாறோடு நாம் நட்பாக இருப்பது அவசியம். அது குறித்து ‘சுற்றந்தழால்’ எனும் அதிகாரத்தில் நம் பேராசான் விரிவாகச் சொல்கிறார்.


சரி, இன்றைய செய்திக்கு வருவோம்.

‘கிளைஞர்’ என்றால் கால் வழி, கால் வழியாக கிளைத்துக் கொண்டே செல்லும் உறவுமுறை. கிளைஞர்கள் நண்பர்களாகவும் இருக்கலாம். நண்பர்கள் கிளைஞர்கள் ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை!


‘கிளைஞர்’ என்ற சொல்லை நம் வள்ளுவப் பெருந்தகை ஒரு குறளில் பயன் படுத்தியுள்ளார். அதுவும் நட்பாராய்தல் எனும் 80ஆவது அதிகாரத்தில்.

மீள்பார்வைக்காக காண்க 18/12/2021.


கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.” --- குறள் 796; அதிகாரம் – நட்பாராய்தல்


கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் = நட்புகளின் எல்லைகளை அளப்பதற்கு ஒரு அளக்கும் கோல்; கேட்டினும் உண்டோர் உறுதி = வந்த துண்பத்திலும் நமது அறிவு மேம்படும்; நட்பைப் பற்றி ஆய்ந்து கொள்ளலாம். இது நிச்சயம், உறுதி.


இது நிற்க.


சுற்றந்தழால் எனும் அதிகாரத்தின் பொருளை விளக்கும்போது மணக்குடவப் பெருமானும், பரிமேலழகப் பெருமானும் சொல்வது என்னவென்றால் “... அரசன் தன் கிளைஞரைத் தன்னின் நீங்காமல் அணைத்தல்” என்கிறார்கள்.


அதாவது, “சுற்றத்தை அரவணைத்துச் செல்லவேண்டும்” என்கிறார்கள்.


தெரிந்து தெளிதலில் இவன் நம் மீது அன்புடையவன் என்று பார்த்து வேலைக்குச் சேர்க்கக் கூடாது என்றார் (குறள் 507). வேலைக்குச் சேர்த்துக் கொள்வது என்பது வேறு; அன்புடன் பழகுவதைத் தொடர்வது என்பது வேறு என்பது குறிப்பு.


அதனைத் தெளிவுபடுத்தவே தெரிந்து வினையாடலின் பின் சுற்றந்தழாலை வைத்துள்ளாராம். நாளை தொடருவோம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்






12 views3 comments
Post: Blog2_Post
bottom of page