சிற்றினம் அஞ்சும் பெருமை ... குறள் 451
20/03/2022 (387)
உங்களுக்கு எல்லாம் தெரிந்த கதைதான்.
யானை ஒன்று அப்போதுதான் நல்லா குளித்துவிட்டு வருதாம். அது வருகிற வழியிலே ஒரு விலங்கு நல்லா சாக்கடையிலும், சேறிலும் புரண்டுட்டு ஒரே ஆட்டமா ஆடிட்டு ஆர்பாட்டாமா வருதாம். என்னை வெல்ல யாருமில்லை … ன்னு பாட்டு வேற பாடிட்டு வருதாம்.
இதைப் பார்த்த யானை, பவ்யமா, அது போவதற்கு வழிவிட்டு, ஒரு மரத்துக்கு பின்னாடி ஒதுங்கிடுச்சாம். இதைப் பார்த்த அந்த விலங்குக்கு ஒரே குஷி. பாரு என்னைப் பார்த்து அம்மாம் பெரிய யானையே பயப்படுதுன்னு சொல்லிட்டு போச்சாம். உடனே, அதுகூட கும்மாளம் போட ‘பலது’ சேர்ந்துடுச்சாம்.
இது எப்படி இருக்கு?
அது போலத்தான், பெரியோர்கள், சிற்றினத்தைக் கண்டு அஞ்சுவார்களாம். ஆனால், சிறியோர்கள் அவங்க மாதிரி இருக்கவங்க கூட்டத்திலே சேருவதைத்தான் விரும்புவார்களாம்.
நம்ம பேராசான் குறளில்:
“சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.” –குறள் 451; அதிகாரம் – சிற்றினம் சேராமை
பெரியோர்கள் சிற்றினத்தோடு சேருவதை அஞ்சுவார்கள்; சிறியோர்கள் அவர்களை மாதிரி ஆட்களைப் பார்த்துவிட்டால் உடனே, இவங்க எல்லாம் நம்மாளுடா என்று ஒன்றாக சேர்ந்து கொள்வார்களாம்.
பெருமை சிற்றினம் அஞ்சும் = பெரியோர்கள் சிற்றினத்தோடு சேருவதை அஞ்சுவார்கள்; சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் = சிறியோர்கள் அவர்களை மாதிரி ஆட்களைப் பார்த்துவிட்டால் உடனே நம்மாளுடா இவங்க எல்லாம் என்று ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
