15/04/2023 (772)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நம்ம பேராசான் சொன்னதைக் கேட்டு சொல்லுவதில் வல்லவர்கள் ஆகிவிட்டால் என்ன நடக்கும் என்று அடுத்த இரண்டு பாடல்கள் மூலம் சொல்கிறார்.
‘இகல்’ என்றால் மாறுபாடு, மாற்றார், பகை, கருத்தொற்றுமை இன்மை இப்படிப் பல பொருள்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.
தனது கருத்துகளை, நன்றாக, எப்படி எப்படியெல்லாம் எடுத்து வைக்க வேண்டுமோ அவ்வகையில் எல்லாம், சிறிதும் சோர்வில்லாமலும், அவையைக் கண்டு அஞ்சாமலும் இருப்பவர்களை வெல்வது என்பது நடக்காத காரியம்.
“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.” --- குறள் 647; அதிகாரம் – சொல்வன்மை
சொலல்வல்லன் = (நம் பேராசான் முன்பு கூறிய வண்ணம்,) நல்ல சொல்வன்மை பெற்றவர்; சோர்விலன் = எந்த எந்த வகையில் எல்லாம் எடுத்து வைக்க வேண்டுமோ அந்த வகையில் எல்லாம் சோர்வில்லாமல் சொல்லக் கூடியவர்; அஞ்சான் = மேலும் அவைக்கு அஞ்சாமல் இருப்பவர்; இகல் வெல்லல் = (அவரை) மாறுபாடு கொண்டு வெல்ல நினைப்பது என்பது; யார்க்கும் அரிது = யாருக்கும் இயலாத செயல்.
நம் பேராசான் முன்பு கூறிய வண்ணம், நல்ல சொல்வன்மை பெற்றவர், எந்த எந்த வகையில் எல்லாம் எடுத்து வைக்க வேண்டுமோ அந்த வகையில் எல்லாம் சோர்வில்லாமல் சொல்லக் கூடியவர், மேலும் அவைக்கு அஞ்சாமல் இருப்பவர், அவரை, மாறுபாடு கொண்டு வெல்ல நினைப்பது என்பதுயாருக்கும் இயலாத செயல்.
இது நிற்க.
‘நிகழ்ச்சி நிரல்’ (Programme) என்றால் நிகழ்ச்சிகளை வரிசைப்படி தொகுத்துச் சொல்வது. ‘நிரல்’ என்றால் வரிசை, ஒழுங்கு இப்படி பல பொருள்கள் இருக்கின்றன.
தற்காலத்தில், ‘Computer programme’ என்பதை ‘கணிணி நிரல்’ என்று மொழி பெயர்க்கிறார்கள்.
“நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓர்இனப் பொருளை ஒருவழி வைப்பது
ஓத்துஎன மொழிப, உயர்மொழிப் புலவர்”. --- பாடல் 472; செய்யுளியல்; பொருளதிகாரம்; தொல்காப்பியம்
‘இயல்’ என்று சொல்கிறோமே அதன் இலக்கணத்தைச் சொல்கிறார் நம் தொல்காப்பியப் பெருமான். அதாவது, சிதறிக் கிடக்கும் மணி போன்ற கருத்துகளை ஒரு வரிசைப்படி தொகுப்பாக வைப்பது ஓத்து என்கிறார்.
விடுவது வீடு; படுவது பாடு என்பது போல ஒத்தது ஓத்து!
ஆக ‘நிரல்’ என்றால் ஒத்தக் கருத்துகளை ஒரு அழகான வரிசையில் அமைத்துச் சொல்லுதல்.
ஆமாம், சரியா சொன்னீங்க. நம்ம வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் போல.
‘நிரல்யா’ என்று பெண் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள். நிரல்யா என்றால் ஓரு ஒழுங்கு அவளிடம் வரிசைகட்டி நிற்கிறது என்று பொருள். அவள் computer programme கூட செய்வாளாக்கும்! நிரல்யா என்பதை தமிழ் இலக்கணப்படி எழுத வேண்டுமானால் ‘நிரல்லியா’ என்று எழுத வேண்டுமாம். செல்லமாக ‘நிரலி’ என்றும் அழைக்கலாம் பாருங்க!
சரி, சரி இதோ குறளுக்கு வருகிறேன்.
ஆமாம், நிரலைப் பார்க்கப்போய் எங்கெங்கோ போயிட்டோம்.
அடுத்து வரும் குறள், நம்ம பேராசானையே பாராட்டுவதுபோல் அமைந்துள்ளது.
“விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.” --- குறள் 648; அதிகாரம் – சொல்வன்மை
ஞாலம் = உலகம்; தொழில் நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் = கருத்துகளை ஒரு ஒழுங்கில் அமைத்து இனிமையாகச் சொல்ல வல்லவர்கள் இருந்தால், (அவர்களின் சொல்லை); ஞாலம் விரைந்து கேட்கும் = இந்த உலகம் வேக வேகமாகக் கேட்டு செயல்படும்.
கருத்துகளை இரு ஒழுங்கில் அமைத்து இனிமையாகச் சொல்ல வல்லவர்கள் இருந்தால், அவர்களின் சொல்லை, இந்த உலகம் வேக வேகமாகக் கேட்டு செயல்படும்.
என்ன ஒரு புத்திசாலித்தனம் பாருங்க நம்ம பேராசானுக்கு! அவருக்கு அவரே ஒரு பாராட்டு போட்டுக் கொள்வது மாதிரி இல்லை இந்தக் குறள்.
சொல்வன்மைக்கு அவரைவிட ஒரு உதாரணம் நாம் தேட முடியுமா?
ஆக, சொல்வன்மை இருந்தால் அவரை யாரும் வெல்ல முடியாது என்பது மட்டுமல்ல, இந்த உலகமும் அவரின் பேச்சிற்குக் கட்டுப்படும் என்று இந்த இரண்டு பாட்டாலும் (647, 648) சொல்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
indeed very useful for Leaders and product and concept sellers.