23/01/2022 (332)
இல்லறத்தில் ஒருத்தர் இல்லாளோடு இருக்கிறார். இல்லாளோடு இருந்தால்தானே இல்லறம்ன்னு கேட்கறீங்க? மிகச்சரி.
கல்யாணம் முடிச்சுட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்? வீட்டை ஒழுங்காக பார்த்துக்கணும். அப்படி இல்லையென்றால் அந்த வீடு வீடாக இருக்குமா? காடு மாதிரி ஆகிவிடாதா? – இப்படியெல்லாம் நான் கேட்கலைங்க, நம்ம வள்ளுவப்பெருமான் கேட்கிறார்.
எதற்கு இதைச் சொல்கிறார் என்றால், அதுபோல, உழது பயிர்செய்த நிலத்தையும் ஒருத்தன் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கனுமாம். உவமையாகச் சொல்கிறார்.
“பார்க்காத பயிரும் பாழ்; கேட்காத கடனும் பாழ்”
கிழமை என்றால் உரிமை என்று பொருள். கிழவன் என்றால் உரியவன் என்று ஆகும். ஞாயிற்றுக் கிழமை என்றால் சூரியனுக்கு உரியது. திங்கள் கிழமை என்றால் சந்திரனுக்கு உரியது… இப்படி ஏழு நாட்களை உரியதாக சொல்லியிருக்கிறார்கள். இதை விரித்தாலும் விரியும் போல இருக்கிறது.
நாம் குறளுக்கு வருவோம்.
“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.” --- குறள் 1039; அதிகாரம் – உழவு
கிழவன் செல்லான் இருப்பின் = நிலத்திற்கு உரியவன் சென்று பார்க்காமல் சோம்பி இருப்பானாயின்; புலந்து = வெறுத்து; நிலம் இல்லாளின் புலந்து ஊடி விடும் = இல்லாள் எப்படி வெறுத்து ஊடிவிடுவாளோ அதுபோல ஊடிவிடும். வேலைக்கு ஆகாது!
பள்ளியிலிருந்து இல்லறம்வரை அழைத்துவந்தாற் போல் இல்லையா? நாம் பார்த்த ஐந்து குறள்களும்.
சொல்லவேண்டியது எல்லாம் சொல்லிட்டேன். இதற்கு அப்புறமும் அப்படியேதான் இருப்பேன் என்றால்? என்று ஒரு கேள்வியைப் போட்டு அதற்கு பதில் சொலவது போல ஒரு குறளைப் போட்டு முடிக்கப் போகிறார். நாளை பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Copying comment from my friend Anbu Raj "இது நுட்பமான குறள்...
ஆம், மனைவியை கவனிக்காவிட்டால் மனைவி போச்சு.....(vice versa)....படிப்பை கவனிக்காவிட்டால் படிப்பு போச்சு....... இப்படியாக"