20/05/2023 (807)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இப்போதுதான் மணம் முடித்த ஒருவன், தன் மனைவியின் தோழியிடம், தான் பணியின் காரணமாக வெளியூர் செல்ல வேண்டுமென்றும், உடனே விரந்து திரும்பி விடுவேன் என்றும் இதனை என்னவளுக்கு இதமாக எடுத்துச் சொல்வாயா? என்று கேட்கிறான்.
அதற்கு, அவள், நீ போகமல் இங்கு இருப்பாய் என்றால் என்னிடம் சொல். அவ்வாறில்லாமல், நீ அவளைப் பிரிந்து சென்று திரும்புவேன் என்றால் அப்போது யார் இருக்கிறார்களோ அவர்களுக்குச் சொல் என்கிறாள்.
இதன் மூலம், தோழி சொல்வதென்ன?
அதாவது, அவன் பிரிந்து சென்றால், அவனின் நல்லாள் தாங்கமாட்டாள். அவளின் உயிரும் அவளிடம் தங்காது என்பதைக் குறிப்பால் சொல்கிறாள்.
இவ்வாறு, சொல்வது குறிப்புச் சொல் என்கிறார்கள்.
“செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.” --- குறள் 1151; அதிகாரம் – பிரிவாற்றாமை
செல்லாமை உண்டேல் எனக்கு உரை = நீ போக மாட்டேன் என்பதை எனக்குச் சொல்; மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை = அப்படி இல்லாமல், (நீ சென்று) விரைந்து வருவதை அப்போது உயிரோடு இருப்பவர்களுக்குச் சொல்.
நீ போக மாட்டேன் என்பதை எனக்குச் சொல்; அப்படி இல்லாமல், நீ சென்று விரைந்து வருவதை அப்போது உயிரோடு இருப்பவர்களுக்குச் சொல்!
நம்ம பேராசான் சொல்களில் விளையாடுகிறார்!
ஒலி வேறுபாட்டால், செஞ்சொல்லும் குறிப்புச் சொல்லாக மாறும். அதனையும் ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம்.
அம்மா, தான் கடைக்குச் சென்று வருகிறேன். நீ அதற்குள் சமையலை முடித்துவிடு என்று தன் பெண்ணிடம் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அதற்கு, அந்தப் பெண், “ நீங்கள் தா – ரா -ள – மா – க – ப் – போயிட்டு வாங்க. நான் உங்களுக்கு ச – மை – த் – து வைப்பேன்” என்று இழுத்து ஏளனமாகச் சொன்னால் என்ன பொருள்?
அவளுக்கு, விருப்பமில்லை என்றுதானே பொருள். இதுதான் ஒலி வேறுபாட்டால் அமையும் குறிப்புச் சொல்.
ஆக மொத்தம் சொல்லின் தொகையான, செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என்ற மூன்றினையும் ஒரு அமைச்சன் அறிந்து இருக்க வேண்டும் என்கிறார்.
மேலும், அவையில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அவை என்றால் அளவை என்றும் பொருள்படும். அவையையும் அளக்க வேண்டும். அவையில் உள்ளவர்களை மூவகையாகப் பிரிக்கலாமாம்.
அதாவது, அவர்களை அறிவில் சிறந்தோர், ஒத்தோர், மற்றும் வளர்ந்து கொண்டு வருவோர் எனப்பிரித்து அவர்களுக்கு ஏற்றார்போல் ஒரு அமைச்சர் பேச வேண்டுமாம்.
அவை அறிதல் என்பது இலேசான காரியம் இல்லை போலும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires