14/01/2022 (323)
தமிழர் திருநாள் வாழ்த்துகள் மற்றும் அனைவருக்கும் அறுவடைத் திருநாள் வாழ்த்துகள்.
உலகியலில் பல தொழில்கள் இருக்கு. வள்ளுவப் பெருமான் காலத்திலேயேயும் இருந்திருக்கும். ஆனால், உழவுக்கு மட்டும் தான் ஒரு அதிகாரம் வைத்திருக்கார் நம் பேராசான், 104 ஆவது அதிகாரம். பொருட்பாலில் ஒழிபு இயலில் இருக்கு.
உழவைத் தொழிலாகப் பார்த்திருக்க மாட்டார் நம் பேராசான் என்றே நினைக்கிறேன். வேறு எந்தத் தொழிலுக்கும் ஒரு அதிகாரம் இல்லை.
உழவு என்பது தொழில் அல்ல. அது வாழ்க்கை முறையாக இருந்திருக்கிறது.
நவினமயமாக்கலில்தான் அனைத்தையும் தொழிலாகவும் அனைத்துப் பொருட்களையும் ‘பண்டமாகவும்’ (commodity) அவை அனைத்தையும் சந்தைப்படுத்த (market) வேண்டுமென்றும் அதை ஒரு தொழில்துறையாகவும் (industry) மாற்றிவைத்துள்ளது. ஏதேதோ சொல்லி மயக்கி உழவையும் விழ வைத்துவிட்டது அவர்கள் கால் அடியில்.
எரிபொருட்களின் விலையை நிர்ணயிப்பதிலிருந்து எருவின் விலையை நிர்ணயிப்பது வரை ‘சந்தை’ என்ற ஒரு கற்பனை பூதம் முடிவு செய்கிறது.
பெரும்பாலானச் சரக்குகளுக்கு காலாவதி (expiry) என்பது இல்லை. இருந்தாலும், தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அதை நீட்டிக்கவும் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதனால் பலர் தப்பிக்கிறார்கள்.
உண்மையில் காலாவதியாக்கூடிய சரக்குகளை (perishable goods) செய்பவர்கள் உழவர்கள் மட்டும்தான். அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களால் விலை நிர்ணயம் செய்யமுடியாது. Minimum support price (MSP) குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராட வேண்டிய நிலை ஆச்சரியகரமானது. அதையும்கூட நிர்னயிக்க கூடாது என்று உலக வர்த்தக அறிஞர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சும்மா இருந்தாலும், சுற்றி சுற்றி வந்தாலும் வயிற்றுக்கு பசி வருகிறது. உணவு தேவைப் படுகிறது. உலகமே உணவுக்குப் பின்தான், இல்லை இல்லை, உழவுக்குப் பின்தான் என்கிறார்.
“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை.” --- குறள் 1031; அதிகாரம் – உழவு
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்= என்னதான் இந்த உலகம் எது பின்னாடி சுற்றினாலும் கடைசியிலே வயிற்றுப்பாடுன்னு ஒன்று இருக்கு அதனால்; உழன்றும் உழவே தலை = உழவன் உழன்றாலும் அவனின் உழவு என்பது தலையாயது.
அந்த காலத்திலும் உழவனுக்கு அதே நிலைமையா? அதுதான் ‘உழன்றும்’ என்று சொல்லியிருக்கிறாரா? கவனம் வைப்போம்.
மீண்டும் வாழ்த்துகளுடனும், நன்றிகளுடனும்
உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios