01/04/2022 (399)
அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி. மன்னவன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி. இப்படி பல பழமொழிகள் தமிழில் இருக்கின்றன. தலைவனின் அடியொற்றி நடப்பது மக்களின் இயல்பு. இது தற்காலிகம்தான். செயல்கள் மக்களின் ஏற்றத்திற்கு மாறாக இருந்தால் மன்னவர்களும் மாற்றப் படுவார்கள். ஆனால், அறிவாசான்கள் நிலைத்திருப்பர்.
மக்களின் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்றால் தலைவன் யாருடைய அடியொற்றி நடக்கனும்? அதற்குத்தான் இந்த பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரம்.
சூழ் என்றால் சுற்றி வளைத்தல் என்று நமக்குத் தெரியும். சூழ் என்றால் நுட்பம் என்ற பொருளும் இருக்கிறதாம். உதாரணம் சூழ்ச்சி.
சூட்சுமம் என்ற சொல் சூழ் என்ற வேர்ச்சொல்லில் இருந்துதான் வந்துள்ளதாம். சூட்சுமம் என்றால் நுட்பமான உள்பொருள்.
சூழ்வார் என்றால்? நுட்பமான அறிவுடையவர்கள் என்று பொருளாம். அத்தகைய அறிவுடையவர்களின் பின்தான் உலகம் இயங்குமாம். அதனாலே, தலைவர்களாக இருப்பவர்கள், முயல்பவர்கள் அத்தகையப் பெரியவர்களைச் சூழ்ந்து தங்களயும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாம்.
“சூழ்வார்கண்ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.” --- குறள் 445; அதிகாரம் – பெரியாரைத் துணைக்கோடல்
உலகம் பெரியவர்களின் அடியொற்றித்தான் ஒழுகுவதால், இயங்குவதால் தலைவர்கள் அத்தகைய பெரியவர்களைச் சூழ்ந்து கொண்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சூழ்வார்கண் ஆக ஒழுகலான் = உலகம் பெரியவர்களின் அடியொற்றித்தான் ஒழுகுவதால், இயங்குவதால்; மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் = தலைவர்கள் அத்தகைய பெரியவர்களைச் சூழ்ந்து கொண்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)

Comentarios