தக்கார் இனத்தனாய்த் ... குறள் 446
02/04/2022 (400)
உங்களோட உரையாடுவதால்தான் என்னால் எழுதமுடிகிறது. அதிலே எனக்கு பெருமகிழ்ச்சி. உங்களின் கருத்துகளைக் கேட்பது அதனினும் மகிழ்ச்சி. இன்றைக்கு 400 ஆவது நாள் என்பதிலே ஒரு பெருமிதம் இருக்கத்தான் செய்கிறது. இதைத்தான் நம் வள்ளுவப் பேராசான் ‘தக்கார் இனத்தனாய்’ என்று சொல்கிறார் போலும்.
தக்க அறிவுடையவர்கள் கூட்டத்திலே ஒருவன் தன்னை இணைத்துக் கொண்டால், இணைத்துக் கொள்வது மட்டுமல்ல, தானும் அவர்களைப் போல நடந்து கொண்டால் அவனை பகைவர்கள் செய்யக்கூடியது எதுவும் இல்லையாம்.
பகைவர்கள் செய்யக்கூடியது என்று பரிமேலழகப் பெருமான் விரிக்கிறார். வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் …இப்படி பலத்துன்பங்களுக்கெல்லாம் தீர்வு தக்காரோடு இணைத்துக் கொள்ளுதலாம்.
அந்த வகையிலே கொடுத்து வைத்ததைப்போல உணர்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். முன்கூட்டியே வாழ்த்துகளைத் தெரிவித்த நண்பர்கள் கோபால், முத்து உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள் பல.
தொடர்ந்து தன் கருத்துகளைப் பின்னூட்டமாக பதிவிட்டு என்னையும் ஊக்குவித்துக் கொண்டுவரும் திருவாளர் கோட்டீஸ்வரன் ஐயா மற்றும் அவர்தம் நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
இரகசியக் காதலர்கள் போலத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துபவர்களுக்கும் நன்றிகள் பல. குறுஞ்செய்திகள் மூலம் ஊக்குவிப்பவர்களுக்கும் நன்றிகள் பல.
மனதாலே வாழ்த்திக் கொண்டு இருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.
குறளுக்கு வருவோம்.
“தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.” --- குறள் 446; அதிகாரம் – பெரியாரைத் துணைக்கோடல்
அறிவிலும் அனுபவத்திலும் உயர்ந்துவிளங்கும் தக்கவர்களை தன் இனமாகக் கொண்டு தானும் அவர்களைப்போல ஒழுக வல்லவர்களிடம் பகைவர்கள் செய்யக்கூடியது எதுவும் இல்லை
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானை =அறிவிலும் அனுபவத்திலும் உயர்ந்துவிளங்கும் தக்கவர்களை தன் இனமாகக் கொண்டு தானும் அவர்களைப்போல ஒழுக வல்லவர்களிடம்; செற்றார் செயக்கிடந்தது இல் = பகைவர்கள் செய்யக்கூடியது எதுவும் இல்லை
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
