top of page
Search

தஞ்சம் தமர் அல்லர் ... 1300

15/03/2022 (382)

நெஞ்சொடுபுலத்தல் அதிகாரத்தில் கடைசிக் குறளுக்கு வந்துவிட்டோம்.

நெஞ்சே நீயே எனக்குத் துணையாக இல்லாவிட்டால் அயலாரைப்போய் எனக்குத் துணையாக இருக்கனும்ன்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? இப்படி ஒரு கேள்வியைப் போட்டு முடிக்கிறார்.


அயலாருக்கு நம் பேராசான் பயன்படுத்தும் சொல் ‘ஏதிலார்’. ஏதிலார் என்றால் அயலார், பகைவர் என்று பொருள்.


தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய

நெஞ்சம் தமரல் வழி.” --- குறள் 1300; அதிகாரம் - நெஞ்சொடுபுலத்தல்


எனது நெஞ்சம் எனக்கு சுற்றம் அல்லாத வழியில் செல்லும் போது அயலார் எப்படி எனக்கு சுற்றமாவார்கள்?


தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி = எனது நெஞ்சம் எனக்கு சுற்றம் அல்லாத வழியில் (செல்லும் போது); தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் =அயலார் எப்படி எனக்கு சுற்றமாவார்கள்?


பல சமயம் நமக்கு நாமே எதிரிகளாக இருப்போம். அயலார் மேல் பழி போடுவோம். நாம் சரி செய்யவேண்டியது நம் மனத்தை.


நம்ம மனசோட ஒரு நல்ல உறவு இருந்துவிட்டால் நாம ‘மனசன்’ ஆகி விடுவோம்.


மனசுக்கும் உடம்புக்கும் ஒரு தொடர்பு இருக்கு.


மனசு சொல்வதைத்தான் உடம்பு செய்யும். இது ஆரம்ப நிலை. இது கொஞ்சம் மாறும்.

மனசு சொல்லும்: வேண்டாம் இதெல்லாம் தப்புன்னு. ஆனால், நாம் அதிலிருந்து வேறுபட்டு வேண்டாததைச் செய்வோம்.


அப்போ அந்த மனசு கொஞ்சம் சண்டைப்போடும். வேணாம் விட்டுற்றா தம்பின்னு சொல்லும்.


உடம்பு அதன் புலன் இன்பத்தால் ‘அதை’ மீண்டும், மீண்டும் செய்யும். அப்போ என்னாகும், மனசு அமைதியாயிடும். ‘அது’ பழக்கமாயிடும்.


மனசுக்கும் உடம்புக்கும் தொடர்பு அறுந்து போகும்.


“நான் ஏன் இதைத் தொடர்ந்து செய்கிறேன்” என்று நாமே புலம்புவோம்.


“…நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்

குடிக்கின்ற கோப்பையை உடைத்து விட்டான்

மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான்

சபதத்தை அவன் இன்று உடைத்து விட்டான்..” கவிஞர் வைரமுத்து


இதை சரி செய்ய என்ன வழி?


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)







10 views2 comments
Post: Blog2_Post
bottom of page