14/06/2022 (473)
‘அன்பின் விழையார்’, ‘பண்பில் மகளிர்’, ‘பொருட் பெண்டிர்’, ‘பொருட்பொருளார்’, ‘பொதுநலத்தார்’, போன்ற அடைமொழிகளைத் தொடர்ந்து ‘தகைசெருக்கிப் பாரிப்பார்’ என்று பயன்படுத்துகிறார் நம் பேராசான்.
அதாவது, கடியும் போதுகூட உயர்ந்த சொற்களை நம் வள்ளுவப் பெருந்தகை பயன்படுத்துவதைக் கவனிக்க வேண்டும். அவர்கள் பெண்கள் என்பதாலா? இது ஆராய்ச்சிக்கு உரியது.
‘தகை செருக்கிப் பாரிப்பார்’ என்றால் ஆடல், பாடல், அழகு முதலியனவற்றால் மயக்கி வாழ்பவர்களாம். ஆடல், பாடல் போன்றவை நுண்கலைகள். அதனால் ‘தகை’ என்ற உயர்ந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
அப்புறம்தான் கண்டுபிடிச்சாங்க நுண்கலைகள் எல்லாம் தேவையில்லை. அவ்வளவெல்லாம் மெனக்கெட வேண்டியது இல்லை. அழகு, கவர்ச்சி, மினுமினுப்பு போதும், வீட்டில் இருக்கும் விட்டில் பூச்சிகளைக் காலி செய்ய என்று!
வரைவின்மகளிரைப் ‘பொதுநலத்தார்’ என்றதால் அவர்களை நாடாமல் தன் சுற்றத்தின் நலத்தை மட்டும் நாடும் ஆடவர்களை ‘தன்நலம் பாரிப்பார்’ என்று சுட்டுகிறார்.
“தன்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.” --- குறள் 916; அதிகாரம் – வரைவின் மகளிர்
தன்நலம் பாரிப்பார் = தமது சுற்றத்தை உயர்த்த நினைப்பவர்கள், இன்பத்தைப் பெருக்க முயல்பவர்கள்;
தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் தோயார்= தோற்றத்தினால், வடிவத்தினால், ஆடல், பாடல் போன்ற பல கலைகளினால் கவர்ச்சியைத் தூண்டி இழிந்த இன்பத்தைத் தரும் வரைவின் மகளிரின் தோள்களில் சாய்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.
தமது சுற்றத்தை உயர்த்த நினைப்பவர்கள், இன்பத்தைப் பெருக்க முயல்பவர்கள், தோற்றத்தினால், வடிவத்தினால், ஆடல், பாடல் போன்ற பல கலைகளினால் கவர்ச்சியைத் தூண்டி இழிந்த இன்பத்தைத் தரும் வரைவின் மகளிரின் தோள்களில் சாய்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள்.
சுற்றத்தின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண வேண்டுமா? அந்தப் பக்கம் சாயாதே என்பதை அழகாகச் சொல்லியிருக்கும் குறள் இது.
இந்த அதிகாரம் முழுவதும் மிகச் சிறந்த அழகுணர்ச்சியோடும், மிகுந்தப் பொறுப்புணர்வோடும் அமைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments