top of page
Search

தன்னைத்தான் காக்கின் ... குறள் 305, 304

11/04/2022 (409)

மகாகவி பாரதி மிச்சத்தை பின் சொல்வேன் என்றார் அல்லவா? மேலும் தொடர்கிறார் –(பாரதி – அறுபத்தாறில் இருந்து)


ஜகதீச சந்தரவஸூ கூறுகின்றான்:

(ஞானானு பவத்திலிது முடிவாங்கண்டீர்)

“நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான்.


கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;

கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்

ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;

அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;

தாபத்தால் நாடியெல்லாம் சிதைந்து போகும்;

கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;

கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்

கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே.”


தீயவை பலவற்றைக் கொல்வதற்கு முதலில் கோபத்தைக் கொன்றீடுவீர் என்கிறார். அதுதான் வழி.


அடுப்பிலே தண்ணீர் கொதித்துக் கொண்டு இருக்கிறது. கொதிப்பதை நிறுத்த என்ன செய்ய வேண்டும்? அடுப்பை அணைக்க வேண்டும். அது போல, மனதிலிருக்கும் வெறுப்பு எனும் தீயை அணைக்க மனக்கொதிப்பு அடங்கும். எப்படி அணைப்பது? அன்பு எனும் நீரை உற்றினால் அது அணையும்.


நம்மை நாமே காப்பாற்றிக்கனுமா, சினத்தை நம் சிந்தையிலிருந்து அகற்றிவிட வேண்டும்.


“தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்.” ---குறள் 305; அதிகாரம் - வெகுளாமை


நம்மை நாமளே காபாற்றிக் கொள்ள சினம் வராமல் காக்க வேண்டும்; அப்படி சினம் வராமல் காக்க முடியவில்லை என்றால் அந்தச் சினம் நம்மையே கொன்றுவிடும்.


தன்னைத்தான் காக்கின் சினம்காக்க = நம்மை நாமளே காபாற்றிக் கொள்ள சினம் வராமல் காக்க வேண்டும்; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் = அப்படி சினம் வராமல் காக்க முடியவில்லை என்றால் அந்தச் சினம் நம்மையே கொன்றுவிடும்.


304வது திருக்குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 05/09/2021 (194)


மீள்பார்வைக்காக:


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.” ---குறள் 304; அதிகாரம் - வெகுளாமை


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)





12 views2 comments
Post: Blog2_Post
bottom of page