11/01/2024 (1041)
அன்பிற்கினியவர்களுக்கு:
தம்மைச் சினந்து தீமைகளைச் செய்தவர்களிடமும் எதிர் வினையாக அவர்களுக்கு ஒரு துன்பம் செய்யாமை, மனத்துக்கண் மாசு அற்றவர்களின் கொள்கைகளில் ஒன்று என்றார் குறள் 312 இல். காண்க 09/01/2024.
பகைவர்கள் உள்ளிட்ட யார் ஒருவர்க்கும், எந்தவித நெருக்குதலோ, தூண்டுதலோ இல்லாமல் நாமே வலியச் சென்று தீங்கு இழைப்பது மீளமுடியாத் துன்பத்தைத் தரும் என்றார் குறள் 313 இல். காண்க 10/01/2024.
துன்பம் இழைக்கக் கூடாது என்று சொன்னவர். அடுத்து ஒரு படி மேலே சென்று துன்பம் இழைத்தவர்களுக்கும் அவர்களே வெட்கித் தலை குனியுமாறு நாம் அவர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்றார் குறள் 314 இல். காண்க 12/03/2021.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். – 314; - இன்னா செய்யாமை
புறங்கூறாமையில் ஒரு குறளைப் பார்த்தோம். காண்க 13/06/2021. மீள்பார்வைக்காக:
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு. - 190; - புறங்கூறாமை
அயலாரின் குறைகளைக் கண்டு அதை நன்றாக அலசி ஆராய்ந்து புறம் பேசுவதைப் போலத் தம் குற்றத்தையும் ஒப்புக் கொண்டு பேசினால் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிற உயிர்களுக்கு எந்தத் தீமையும் விளையா.
அஃதாவது தம்மைப் போலவே பிறரையும் பார்க்கவும் என்பது கருத்து.
இதே போன்று, ஒரு துன்பமானது தம்மை எவ்வாறு வருத்தும் என்பதனைத் தெரிந்தவர்கள் பிற உயிர்க்குத் துன்பம் விளைவிப்பார்களா?
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல். – 318; - இன்னா செய்யாமை
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் = தம் உயிர்க்குத் துன்பங்கள்வரின் என்ன பாடுபடும் என்பதைத் தாம் நன்றாக அறிந்தவன்; என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் = எதனால் பிற உயிர்களுக்குத் துன்பங்களை இழைக்கிறான்?
தம் உயிர்க்குத் துன்பங்கள்வரின் என்ன பாடுபடும் என்பதைத் தாம் நன்றாக அறிந்தவன், எதனால் பிற உயிர்களுக்குத் துன்பங்களை இழைக்கிறான்?
இதுகாறும் பெற்ற அறிவின் பயன்தான் என்ன?
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை. – 315; - இன்னா செய்யாமை
பிறிதின் நோய் தம் நோய் போல் போற்றாக் கடை = துறவறத்தில் நின்று அருளைப் பெருக்குபவர்கள், பிற உயிர்கள் படும் துன்பங்களைத் தாம் அடைந்தது போலக் கருதி அவ் உயிர்களையும் தம் உயிர் போலக் காக்காவிட்டால்; அறிவினான் ஆகுவது உண்டோ = இதுகாறும் அவர்கள் பெற்ற அறிவின் பயன்தான் என்ன? ஒன்றும் இல்லை.
துறவறத்தில் நின்று அருளைப் பெருக்குபவர்கள், பிற உயிர்கள் படும் துன்பங்களைத் தாம் அடைந்தது போலக் கருதி அவ் உயிர்களையும் தம் உயிர் போலக் காக்காவிட்டால், இதுகாறும் அவர்கள் பெற்ற அறிவின் பயன்தான் என்ன? ஒன்றும் இல்லை.
இன்னா செய்யாமையில் திருப்பித் திருப்பி ஓர் உயிர்க்குத் துன்பம் செய்யாமையின் முக்கியத்துவத்தைப் பல வழிகளில் சொல்கிறார். அந்தக் கருத்துகளின் அடிநாதம் “உன்னைப் போலவே மற்ற உயிர்களையும் நேசி” என்பதுதான். வரும் குறளில் அதை மீண்டும் தெளிவாக்குகிறார்.
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல். – 316; - இன்னா செய்யாமை
இன்னா எனத்தான் உணர்ந்தவை = துன்பம் தரும் செயல்கள் என்று தாம் உணர்ந்த; பிறன்கட் செயல் துன்னாமை வேண்டும் = அச்செயல்களைப் பிறர்க்குச் செய்யாமை வேண்டும். துன்னாமை = செய்யாமை, மேவாமை;
துன்பம் தரும் செயல்கள் என்று தாம் உணர்ந்த அச்செயல்களைப் பிறர்க்குச் செய்யாமை வேண்டும்.
“பிறர்க்கு” என்பதை பிற உயிர்களுக்கு என்று பொதுப்பட எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare