தம்மின் மெலியாரை நோக்கி
Updated: Nov 29, 2021
29/11/2021 (279)
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து பொச்சாப்பால் கெட்டாரை உள்ளுக என்று, அதாங்க நம்மிடம் மிதப்பு தலை தூக்கும் போது இந்த மாதிரி தலைக்கணம் கொண்டு கடமையைச் செய்ய மறந்து அழிந்தவர்களை கொஞ்சம் நினைத்து பாரு – தெளிவு பிறக்கும் என்றார் நம் பேராசான் குறள் 539ல்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொன்று இருக்கு. தமக்கு கொடுக்கப்பட்ட அருட்கொடைகளுக்காக நாம் மகிழ்ச்சி கொள்ளனுமாம். (மிதப்பு கூடாது என்பது கூறாது கூறல் - paralipsis). இங்கே மகிழ்ச்சி என்பது நிம்மதி.
“மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா
…
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு…” கவியரசு கண்ணதாசன்; சுமைதாங்கி திரைப்படம் (1962)*
1330 குறள்களையும் சுருக்கி 102 வெண்பாக்களால், குமரகுருபர சுவாமிகளால், 17ஆம் நூற்றாண்டில் அருளப்பட்டது “நீதிநெறி விளக்கம்” எனும் நூல். அதில் ஒரு பாடல்:
“தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை
அம்மா பெரிது என்று அகம் மகிழ்க; -தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்து அழிக, கற்றது எல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று” --- நீதி நெறி விளக்கம்; குமரகுருபர சுவாமிகள்
பொருள்: பெற்றது போதும் என்று அகம் மகிழ்க; கற்றது போதாதென்று மேலும் கற்க
பொச்சாவாமைக்கு அடிப்படை இந்த இரண்டுதான். 1. செல்வச் செருக்கு செல்லாது; 2. கல்விச் செருக்கும் கூடாது
இப்படி இருந்தால் என்ன நடக்கும்ன்னு கேட்கறீங்களா?
எல்லாம் நடக்குமாம். சொல்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.
நாளை தொடரலாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.

*1962 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் கவியரசரால் தயாரிக்கப்பட்டது, இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள்