top of page
Search

தூஉய்மை யென்ப ... 364, 400, 363, 291, 10/02/2024

10/02/2024 (1071)

அன்பிற்கினியவர்களுக்கு:

விழுச்செல்வம் என்றால் ஆகச் சிறந்த செல்வம் என்று பொருள். நம் பேராசான் இரண்டனை விழுச்செல்வம் என்கிறார். ஒன்று வேண்டாமை அஃதாவது அவா அறுத்தல். மற்றொன்று கல்வி.

 

ஞானத்தின் முதல் படி கேட்டல். ஆகவே, கல்வி ஒரு விழுச்செல்வம். காண்க 05/02/2021. மீள்பார்வைக்காக:

 

கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை. – 400; - கல்வி

 

அந்தக் கல்வியின் முடிவான முடிவு வேண்டாமை என்பதனால் அதுவும் ஒரு விழுச்செல்வம் என்கிறார் அவா அறுத்தல் அதிகாரத்தில்.

 

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

ஆண்டும் அஃதொப்ப தில். – 363; - அவா அறுத்தல்

 

வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை = அவா அறுத்தலைப் போன்று ஆகச் சிறந்த செல்வம் இந்த உலகத்தில் இல்லை; யாண்டும் அஃது ஒப்பது இல் = அது மட்டுமன்று. அதற்கு ஈடான ஒன்றை எங்கேயும் காணவும் முடியாது.

 

அவா அறுத்தலைப் போன்று ஆகச் சிறந்த செல்வம் இந்த உலகத்தில் இல்லை. அது மட்டுமன்று. அதற்கு ஈடான ஒன்றை எங்கேயும் காணவும் முடியாது.

 

அவா அறுத்தலுக்கு எட்டு வழிமுறைகளைச் சொன்னார் புத்த பெருமான் என்று பார்த்தோம். காண்க 08/02/2024. நம் பேராசன் ஒற்றைச் சொல்லில் முடிக்கிறார். வாய்மை வேண்ட தூய்மை வரும் என்கிறார். தூய்மை என்றால்? அதாங்க, அவாவின்மை!

 

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும். – 364; அவா அறுத்தல்

 

தூஉய்மை என்பது அவா வின்மை = மனத்தில் தூய்மை என்பது ஆசையை மனத்தில் இருந்து அறுத்தல்; அது வாஅய்மை வேண்ட வரும் = அது எப்படி அமையும் என்றால் வாய்மையை வேண்ட வரும்.

 

மனத்தில் தூய்மை என்பது ஆசையை மனத்தில் இருந்து அறுத்தல். அது எப்படி அமையும் என்றால் வாய்மையை வேண்ட வரும்.

 

பொய்மை இல்லாதது வாய்மை. காண்க 06/09/2021. மீள்பார்வைக்காக:

 

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் 

தீமை யிலாத சொலல். - 291; - வாய்மை

 

சொலல் என்ற சொல்லில் எண்ணம், சொல், செயல் மூன்றும் அடங்கும்.

அஃதாவது, மனம், மொழி, மெய்களில் தீமை இல்லாமல் இருந்தால் அவாவின்மை கைக்கூடும்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






5 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page