top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

துஞ்சுங்கால் தோள்மேலர் ... 1218, 1219, 1220, 20/03/2024

20/03/2024 (1110)

அன்பிற்கினியவர்களுக்கு:

தோழியின் கடுஞ்சொல்லிற்குப் பதில் சொல்கிறாள்.

 

கண்ணில் நிழலாடுவார். உடனே நான் கண்ணின் இமைகளை இறுக்கமாக மூடிக் கொள்வேன். உறக்கம் என்னைத் தழுவும். கனவில் அவர் என் தோள் மேல்  சாய்ந்து எனக்கு இன்பம் அளிப்பார்.

 

உன்னைப் போல் இருப்பவர் உலுக்கும்போது உறக்கம் கலையும். கண் விழிப்பேன். எங்கே சென்றார் என்று தேடுவேன். அவரோ, விரைந்து சென்று என் நெஞ்சத்துள் அமர்ந்து கொள்வார். அவர் என்னைவிட்டு விலகுவதுமில்லை; என்னைக் கைவிடுவதும் இல்லை என்கிறாள்.

 

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. – 1218; - கனவு நிலை உரைத்தல்

 

துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி = கனவினில் களியாட்டம் நடத்தி என் தோள் மேல் சாய்ந்து கொண்டு ஓய்வு எடுப்பார்; விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து = நான் உறக்கம் கலைந்து விழிக்கும்போது அவர் விரைந்து சென்று என் நெஞ்சத்தில் அமர்ந்து கொள்வார்.

 

கனவினில் களியாட்டம் நடத்தி என் தோள் மேல் சாய்ந்து கொண்டு ஓய்வு எடுப்பார். நான் உறக்கம் கலைந்து விழிக்கும்போது அவர் விரைந்து சென்று என் நெஞ்சத்தில் அமர்ந்து கொள்வார்.

 

தோழி அவை உனக்குத் தெரியவும் தெரியாது. புரியவும் புரியாது என்கிறாள்.

 

சிலரின் கனவில் பிரிந்து சென்ற காதலர்கள் வருவதில்லை போலும். அவர்கள்தாம் பிரிவினைக் குறித்து நொந்து கொள்வார்கள்.

 

நனவினான் நல்காரை நோவர் கனவினான்

காதலர்க் காணா தவர். – 1219; - கனவு நிலை உரைத்தல்

 

கனவினால் காதலர்க் காணாதவர் = கனவினில் தங்கள் காதலர்களைக் காணாதவர்கள்தாம்; நனவினான் நல்காரை நோவர் = பிரிவினால், நேரில் வந்து இன்பம் தர இயலாத தம் காதலர்களை நொந்துகொள்வார்கள்.

 

கனவினில் தங்கள் காதலர்களைக் காணாதவர்கள்தாம், பிரிவினால், நேரில் வந்து இன்பம் தர இயலாத, தம் காதலர்களை நொந்து கொள்வார்கள்.

 

இந்த ஊராரும் அவர்களுடன் சேர்ந்து பழி சொல்வர்.

 

நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்

காணார் கொல் இவ்வூ ரவர். – 1220; - கனவு நிலை உரைத்தல்

 

கனவினான் காணார் கொல் = எங்கள் கனவு வாழ்க்கையைக் காணாததாலோ என்னவோ; இவ்வூரவர் நனவினான் நம் நீத்தார் என்பர் = இந்த ஊர்க்காரர்கள் எம்மைவிட்டு எம் காதலர் பிரிந்துவிட்டார் என்று புறம் பேசுவார்கள்!

 

எங்கள் கனவு வாழ்க்கையைக் காணாததாலோ என்னவோ, இந்த ஊர்க்காரர்கள், எம்மைவிட்டு எம் காதலர்கள் பிரிந்துவிட்டனர் என்று புறம் பேசுவார்கள்!

 

கனவையும் நனவையும் புரட்டிப் போட்டாள். இப்போது காலத்தைப் புரட்டிப் போடப் போகிறாள், அதற்காகப் பொழுது கண்டு இரங்கல் என்னும் அதிகாரம்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Comments


bottom of page