தாண்டிய தரங்கக் கருங்கடல்... பாடல் 238, பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம்.
17/07/2022 (506)
பிழை திருத்தம்: பகவத்கீதையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட சுலோகங்களின் எண்ணிக்கை மொத்தம் 700. நேற்றைய பதிவில் வெளிவந்த 375 என்பதை மாற்றி வாசித்துக் கொள்ளவும். ஆதாரம் – லிப்கோ வெளியிட்ட பகவத்கீதை.
மகாபாரதப் போரில் பதினேழாம் நாள். அந்தி சாயும் நேரம். செக்கச் செவேல் என்றிருந்த சூரியன் கலகத்தில் இருந்தான். தான் இன்றும் மறைவதா என்று கலங்கியிருந்த நேரம். போர்களம் எங்கும் அழுகுரல்கள். இரத்த வாடையைச் சுமந்து கொண்டு காற்று வீசிக் கொண்டிருக்கிறது.
மண்ணில் ஆழ்ந்துபோன தன் தேர் சக்கரத்தை மீட்டெடுக்க முயன்ற போது, அர்ச்சுனனால் தாக்கப்பட்டு, தன் புறந்தலைப் பொருந்த தேர் சக்கரத்தில் சாய்ந்து கிடக்கிறான் கர்ணன்.
அப்போது, அவன் எதிரே தள்ளாடி, தள்ளாடி ஒரு வேதியன் வந்து நிற்கிறார். யார் அது என்று தன் கண்களைக் குறுக்கி அவ் வேதியரை நோக்குகிறான் கர்ணன்.
வேதியர்: கர்ணா நீ வாழி. இந்த கடல் சூழ் உலகில் வேண்டியவர்க்கு வேண்டியது நீ தருவாய் என்று அறிந்தேன். மேரு மலையிடை தவம் புரிந்து கொண்டிருந்தேன். என்னால் தொடர முடியவில்லை. எனக்கு வறுமை வந்து விட்டது. அது சரி கர்ணா, எனக்கு வேண்டியது ஒன்றை நீ அளிப்பாயோ? என்றார் அந்த வேதியர் வடிவில் வந்த கண்ண பரமாத்மா.
“தாண்டிய தரங்கக் கருங்கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு
வேண்டிய தருதி நீயெனக் கேட்டேன், மேருவினிடை தவம் பூண்டேன்,
ஈண்டிய வறுமை பெருந்துயர் உழந்தேன், இயைந்தது ஒன்று இக்கணத்து அளிப்பாய்,
தூண்டிய கவனத்துரகதத்து தடந்தேர் சுடர்தரத் தோன்றிய தோன்றால்.---பாடல் 238, பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம்.
தரங்கம் = அலைகள்; துரகதம் = குதிரை; தோன்றால் = தோன்றல் = தோன்றியவனே
அதைக் கேட்ட உடன், கர்ணன் காதிலே தேன் பாய்ந்தது போல் இருந்தது. கர்ணன் சிரித்தான். “அந்தணா, வாழி நீ. நான் கேட்டதெல்லாம் கொடுக்கும் பருவத்தில் நீ வரவில்லை. பரவாயில்லை.
கேள், கேள் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் அந்தணா. அதற்குமுன் உன்னிடம் ஒன்றே ஒன்று நான் கேட்டுக் கொள்ளட்டுமா அந்தணா!”
“என்னால் தரக்கூடிய பொருளை மட்டும் நீ கேட்பாயோ?” என்றான் கர்ணன்.
அதைக் கேட்ட அந்த வேதியர், “நின் புண்ணியம் அனைத்தும் அருளுக” என்றார்.
நாளை தொடருவோம் என்றார் ஆசிரியர்.
இங்கே நாம் ஏற்கனவே பார்த்துள்ள குறள் ஒன்றை கவனம் செய்வோம். காண்க 13/08/2021 (171).
“அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.”--- குறள் 30; அதிகாரம் – நீத்தார் பெருமை
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்= எல்லா உயிர்களிடத்தும் குளிர்ந்த தன் கருணையைக் கொண்டு இருப்பதால்; அந்தணர் என்போர் அறவோர் = அந்தணர்கள் என்பவர்கள் முற்றும் துறந்து துறவியாக நிற்பவர்கள்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
