top of page
Search

தினற்பொருட்டால் ... 256, 322

17/12/2023 (1016)

அன்பிற்கினியவர்களுக்கு:

இந்த அதிகாரத்திற்குப் புலால் மறுத்தல் என்கிறார். அப்படியென்றால் புலாலை ஒருவர் தரலாம். நாம் மறுக்கலாம் அல்லது ஏற்கலாம். அனைவர்க்கும் இந்த அதிகாரம் பொருந்துமா என்றால் இல்லை என்றே எண்ணுகிறேன். இல்லறத்தில் இருக்கும் சிலர்க்கு விதி விலக்குகள் இருக்கலாம். ஆகையினால் புலால் மறுத்தல் என்கிறார்.

 

ஆனால், யாராக இருப்பினும் அன்பில் இருந்து அருளுக்குச் செல்பவர்கள் புலால் மறுத்தலைக் கடமையாக வைக்க வேண்டும் என்கிறார். சிறுதொண்டர் பெருமானின் கதையைப் பார்த்தோம். ஓய்வெடுக்கும் பருவத்தில் கொல்லாமையும் ஊன் உண்ணாமையும் முக்கியம். இது துறவறத்தின் முதல் படி.

 

கொல்லாமை என்னும் ஓர் அதிகாரத்தையும்(33 ஆவது)  தனியே அமைத்துள்ளார். புலால் மறுத்தலில் சொல்லும் கொல்லாமைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

 

கொலைகள் இருவகைப்படும். அவை யாவன: நேரடியான கொலைகள்(commissions); மறைமுகக் கொலைகள் (omissions).

நேரடிக் கொலைகளும் இருவகைப்படும்: (1) உணவிற்காக விலங்குகளைக் கொல்லுதல்; (2) ஒன்றை வெற்றி கொள்ள அல்லது அழிக்கச் செய்யும் கொலைகள்.

மறைமுகக் கொலைகள் என்பன நமது கவனக் குறைவால் நிகழ்வன. நாம் அவற்றை ஓம்பிப் பாதுகாக்கத் தவறுவதால் ஏற்படும் உயிர் இழப்புகள்.

 

கொல்லாமையின் குறள்கள் எல்லாவகைக் கொலைகளையும் குறிப்பன. அங்கே என்ன சொல்கின்றார் என்றால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் கொல்லாமை என்கிறார். அஃதாவது, எல்லா உயிர்களையும் நேரடியாகக் கொல்லுதல் மட்டுமல்ல கொலைகள். பாதுகாக்காமல் விட்டாலும் அதுவும் கொலைகளே என்கிறார். துறவறவியல் விரதம், ஞானம் என்று இரு பகுதிகள் என்று நமக்குத் தெரியும். விரதத்தில் இறுதி அதிகாரம் கொல்லாமை. இது துறவறத்தின் உயரிய படிநிலை. அதிலிருந்து ஞானம் தோன்றுகிறது.

 

“பகுத்துண்டு” குறளை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டுத் தொடர்வோம். காண்க 09/07/2021.

 

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்

தொகுத்தவற்று ளெல்லாந் தலை. - 322; - கொல்லாமை

 

புலால் மறுத்தலில் சொல்லும் கொலைகள் ஊன் உண்ணச் செய்யும் கொலைகள். அது நாள் தோறும் வளர்ந்து கொண்டே உள்ளது. கிடைத்ததைக் கொன்று தின்றதுபோக இப்போது உண்பதற்காகவே வளர்த்துக் கொல்கிறார்கள்! இதைத் தவிர்க்க வேண்டும்; மறுக்க வேண்டும் என்கிறார்.

 

ஊன் உண்பதற்காகக் கொலைகள் பெருகும் என நினைத்த நம் பேராசான் இதை மட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்துள்ளார்.  வாங்குபவர் இல்லையென்றால் விற்பவர் எப்படி கிளைப்பர் என்கிறார். இஃது ஒரு பொருளாதர நிபுணரின் கேள்வியை ஒத்தது.

 

தின்பதற்காக வளர்த்துப் பின்னர் அதனைக் கொன்று உண்பதைத் தவிர்க்க இந்த உலகம் பழகிவிட்டது என்றால் இவ்வுலகில் யார் அந்த இறைச்சியை மற்றவர்களுக்கு விலைக்கு விற்பார்கள்? யாரும் இருக்கமாட்டார்கள்.

அஃதாவது, எப்படி அவர்களுக்கு விற்கும் அளவிற்கு ஊன் கிடைக்கும் என்கிறார்.  

 

தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். – 256; - புலால் மறுத்தல்

 

தினற் பொருட்டுக் கொல்லாது உலகெனின் = தின்பதற்காக வளர்த்துப் பின்னர் அதனைக் கொன்று உண்பதைத் தவிர்க்க இந்த உலகம் பழகிவிட்டது என்றால்; யாரும் விலைப் பொருட்டு ஊன் தருவார் இல் = (இவ்வுலகில்) யாரும் அந்த இறைச்சியை மற்றவர்களுக்கு விலைக்கு விற்கமாட்டார்கள்.

 

அஃதாவது, தின்பதற்காகவே வளர்த்துப் பின்னர் அவற்றைக் கொன்று தின்னாதீர்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments


Post: Blog2_Post
bottom of page