26/02/2022 (365)
“கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு” என்ன புரியுதா என்று தோழியிடம் அவள் கேட்க:
தோழி: என்னவோ போ. கொஞ்சமாவது பிகு பண்ண வேண்டாமா? அவரும் ஓடி வருகிறார், நீயும் பரபரப்பா ஓடுகிறாய். ஒன்னும் புரியலை.
அவள்: தினையும் பனையும் தெரியுமா உனக்கு?
தோழி: தினைக்கும் பனைக்கும் என்ன சம்பந்தம்?
(நாம ஏற்கனவே பார்த்ததுதான். காண்க 05/04/2021 (78))
அவள்: எவ்வளவு நாள் கழித்து வருகிறார். பனையளவு மகிழ்ச்சி வரும் தருணம் இது. தினையளவு ஊடலும் வரக்கூடாது இப்போது. இதெல்லாம் தெரியனும் என்றால் நீ திருக்குறள் படிக்கனும்…
“தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.” – குறள் 1282; அதிகாரம் - புணர்ச்சிவிதும்பல்
அவள்: இங்கே வா. இந்தக் கண்கள் இருக்கே அது அவரைத் தேடுவதை தடுக்க முடியலை. சரியான வெட்கம் கெட்ட கண்களாக இருக்கு. அவர்தான் அவ்வளவு நாள் பிரிந்து இருந்தாரே, நீ கொஞ்சம் நேரம் வேற திசையிலே பார்க்கமாட்டியான்னு கேட்கிறேன். அது கேட்க மாட்டேங்குது. என் நிலையை அப்படியே படம் பிடித்து காட்டுவதுபோல இருக்கு அடுத்து வரும் குறள்.
“பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண்.” --- குறள் 1283; அதிகாரம் – புணர்ச்சிவிதும்பல்
பேணாது = நம்மைக் கண்டு கொள்ளாமல்; பெட்பம் = விருப்பம்; பெட்பவே செய்யினும் = தன் விருப்பம் போல பிரிந்து போய்விட்டு தற்போது திரும்பி வந்தாலும்; கொண்கனைக் காணாது அமையல கண் = என்னவனைப் பார்க்காது இருக்க முடியலை இந்தக் கண்களால்
தோழி: ஆளை விடு சாமி. என்னாலே முடியலை. நாளைக்கு வரேன். நான் வேற எதற்கு இடைஞ்சலா!
தோழி கழண்டு கொள்கிறாள்.
நாமும் நகர்வோம். நாளைக்கு சந்திப்போம்.
நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
댓글