தும்முச் செறுப்ப ... 1318, 1319, 24/06/2024
- Mathivanan Dakshinamoorthi
- Jun 24, 2024
- 2 min read
24/06/2024 (1206)
அன்பிற்கினியவர்களுக்கு:
மீண்டும் வேண்டாம் வம்பு என்று தும்மலை அடக்க முற்படுகிறான். அதைக் கவனித்த அவள், உங்களை வேறு யாரோ ஒருத்தி நினைக்கிறாள்; அதுஎனக்குத் தெரியாமல் இருக்கட்டும் என்று தும்மலை அடக்குகிறீரோ என்று சொல்லி மீண்டும் ஊடல் கொண்டு அழுதாள்.
தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. – 1318; - புலவி நுணுக்கம்
செறுப்ப = அடக்க; நுமர் = உங்கள் உள்ளம் கவர்ந்தவள்;
தும்முச் செறுப்ப = தும்மி ஏன் மீண்டும் ஊடலுக்கு வழி வகுக்க வேண்டும் என்று எண்ணி நான் தும்மலை அடக்க அதைக் கவனித்த அவள்; நுமர் உள்ளல் = உங்கள் உள்ளம் கவர்ந்தவள் உங்களை நினைக்கிறாள் போலும்; எம்மை மறைத்திரோ என்று அழுதாள் = ஆதலினால்தான் எம்மிடமிருந்து உங்கள் தும்மலை மறைத்தீரோ என்று சொல்லி மீண்டும் ஊடல் கொண்டு அழுதாள்.
தும்மி ஏன் மீண்டும் ஊடலுக்கு வழி வகுக்க வேண்டும் என்று எண்ணி நான் தும்மலை அடக்க அதைக் கவனித்த அவள், உங்கள் உள்ளம் கவர்ந்தவள் உங்களை நினைக்கிறாள் போலும் ஆதலினால்தான் எம்மிடமிருந்து உங்கள் தும்மலை மறைத்தீரோ என்று சொல்லி மீண்டும் ஊடல் கொண்டு அழுதாள்.
தும்மினாலும் குற்றம்; தும்மலை அடக்கினாலும் குற்றம்! இதுதான் ஊடல் நுணுக்கம்.
அவனை அந்தரத்தில் சுற்றிவிடுவதுதான் அவள் நோக்கம்! அவன் வேறு யாரையும், எதனையும் நினைக்கவே கூடாது!
அவன் அவளைத் தாஜா (placate) செய்கிறான். தாஜா என்றால் சமாதனப் படுத்துதல்.
ஒரு திரைப்படப் பாடலைப் பாடுகிறான்.
அவன்:
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே …
அவள்:
போக்கிரி ராஜா போதுமே தாஜா
போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே … கவிஞர் கு. மா. பாலசுப்ரமணியன், மரகதம், 1959
அவளுக்குப் பெரும் மகிழ்ச்சி. அப்பாடா, ஒரு வழியாக சமாளித்துவிட்டோம் என்று நினைக்கிறான். உடனே மீண்டும் அவனைச் சீண்டினாள்.
இப்பொழுது என்னைத் தாஜா செய்து மகிழ்ச்சி அடையச் செய்ததைப் போலப் பிற பெண்களையும் தாஜா செய்ய மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம் என்று சொல்லி மீண்டும் ஊடினாள்.
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. – 1319; - புலவி நுணுக்கம்
தன்னை உணர்த்தினும் = நீ மட்டும்தான் என் நெஞ்சுக்கு நெருக்கமானவள் என்று ஒருவாறு அவளுக்கு உணர்த்தியும்; காயும் = மீண்டும் ஊடினாள், இப்பொழுது என்ன என்றேன்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று = இதுபோலப் பிற பெண்களையும் நீர் சமாதனம் செய்வீர் அல்லவா என்றாள்.
நீ மட்டும்தான் என் நெஞ்சுக்கு நெருக்கமானவள் என்று ஒருவாறு அவளுக்கு உணர்த்தியும், மீண்டும் ஊடினாள். இப்பொழுது என்ன என்றேன். இதுபோலப் பிற பெண்களையும் நீர் சமாதனம் செய்வீர் அல்லவா என்றாள்.
முடியலை சாமி, இவளின் சேட்டைகள்!
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

Comments