07/09/2022 (557)
அவனது மகிழ்ச்சி சொல்லி அடங்கவில்லை! அவளின் ஒண்தொடி என்ற வளைகரங்களை பற்றி ஐம்புலன்களுக்கும் ஏற்பட்ட உணர்வைச் சொன்னவன், அவளே நோய், அவளே மருந்தும் என்றான் அடுத்து.
இன்னும் என்ன சொல்லலாம் என்று யோசித்தவன் மேலும் சொல்கிறான்.
சொர்கம், தேவர் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அதில் நுழைய பலரும் உலகைத் துறந்து தவங்கள் இயற்றுகின்றனர். பல வேறு வழிகளில் முயல்கின்றனர்.
அது எப்படி இருக்கும், அங்கு சென்றவர்கள் அந்த இன்பத்தை அனுபவித்தார்களா என்றும் எனக்குத் தெரியாது.
ஆனால், ஒன்று மட்டும் கேட்பேன்.
காதலர் இருவர் கருத்து ஒருமித்து, தோளில் சாய்ந்து ஒன்றாக கலந்து உறங்குவது இருக்கிறதே அந்த இன்பத்தை அந்த மேல் உலகம் தருமா? (‘முடியாது என்றே நினைக்கிறேன்’ என்ற பொருளில் இந்த கேள்வி)
“தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.” --- குறள் 1103; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
நான், எனது என்ற நிலையெல்லாம் ஒழிந்து ‘தாம்’ என்ற நிலையும் வீழ, ஒன்றாக கருத்து ஒருமித்தவர்கள் இருவரும் தோளில் சாய்ந்து கொண்டு கலந்து உறங்கும் இன்பத்தைவிட, சொர்கம், மேல் உலகம் என்னும் உலகத்தில் கிடைக்கும் இன்பம் இனிமையா என்ன?
தாம் வீழ்வார் = நான், எனது என்ற நிலையெல்லாம் ஒழிந்து ‘தாம்’ என்ற நிலையும் வீழ, ஒன்றாக கருத்து ஒருமித்தவர்கள்; மென்தோள் துயிலின் = தோளில் சாய்ந்து கொண்டு கலந்து உறங்கும் இன்பத்தைவிட; தாமரைக் கண்ணான் உலகு = சொர்கம், மேல் உலகம் என்னும் உலகத்தில் கிடைக்கும் இன்பம்; இனிதுகொல்? = இனிமையா என்ன?
‘பத்தியம்’ என்றால் சிலவற்றை விலக்கி வைப்பது.
தாம்+பத்தியம் தான் தாம்பத்தியம்
“தாம்” என்பதும் வீழ்வதுதான் தாம்பத்தியம். ஒன்றுமில்லா நிலையில் இணைவது.
மேலும் தொடர்கிறான்…
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments