11/10/2021 (230)
வகுத்து உரைப்பவர்களுக்கு இலக்கணங்கள் சொல்லி முடித்த நம் பேராசான், வழி உரைப்பவர்களுக்கு, அதாங்க, கூறியது கூறுபவர்களுக்கான சிறப்புத் தகுதிகளை வரும் மூன்று குறள்களில் கூறப் போகிறார்.
முதலில் அவர்களுக்குத் தூய்மை இருக்கனுமாம். எதிலே தூய்மை என்றால், எண்ணம், சொல், செயல் ஆகியவைகளில் தூய்மை. எதிராளி ஏதாவது காட்டி மயக்க முயற்சித்தால் அதற்கு அடிமையாகி தன்னை நம்பி ஒப்படைத்த வேலைக்கு களங்கம் வராமல் கவனமாக இருக்கும் தூய்மை தேவையாம்.
அடுத்து அவர்களுக்கு தேவையானது துணைமை. துணைமை என்றால்?
தன் தலைமைக்குத் துணையாக இருத்தல். அதாங்க, எதிராளி தம் தலைமையைக் குறித்து தகாதன சொல்லும் போது, அவர்களுக்குப் புரியும் விதத்தில் எடுத்துச் சொல்லி அவர்களின் கருத்தை மாற்றும் வகையில் சொல்லி தன் தலைமைக்கு துணையாக இருத்தல்.
எதிராளி தவறாகச் சொல்லும் போது, ஆமாம் போட்டு தன் தலைமையை விட்டுக் கொடுக்கக் கூடாது. அதாங்க, same side goal போடக்கூடாது.
அதற்குப் பிறகு துணிவு இருக்கனுமாம். பயப்படக் கூடாது. சொன்னதை அப்படியே சொல்லும் துணிவு, தைரியம் இருக்கனுமாம்.
சரி, இது மட்டும் போதுமா? போதாது என்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை. இந்த மூன்றிலும் வாய்மை இருக்கனுமாம்.
வாய்மை என்றால்? நாம ஏற்கனவே பார்த்துள்ளோம்.
“வாய்மைஎனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.” --- குறள் 291; அதிகாரம் - வாய்மை
சொற்கள் இனிமையாகவும், பயனுள்ளதாகவும், தீங்கு இல்லாத உண்மையானதாகவும் இருக்கனும் அதுதான் வாய்மை.
இது நிற்க.
சரி வழியுரைப்பான் குறளைப் பார்க்கலாம்.
“தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழிஉரைப்பான் பண்பு.” --- குறள் 688; அதிகாரம் - தூது
தூய்மை, துணைமை, துணிவுடைமை இம் மூன்றும் இருக்கனும். அது மட்டுமல்ல அதில் வாய்மையும் இருக்கனும். யாருக்கு இருக்கனும்? வழி உரைப்பவர்க்கு இருக்கனும்.
வழி உரைப்பவர் = கூறியது கூறுபவர்; வாய்மை = மெய்ம்மை, உண்மை
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் மதிவாணன்.
Σχόλια