top of page
Search

தையொரு திங்களும் ... நாச்சியார் திருமொழி

26/08/2022 (545)

தமிழர்கள் பொழுதை (காலத்தை) பெரும் பொழுது, சிறு பொழுது என்று பகுத்திருந்தார்கள்.


பெரும் பொழுதுகள் என்பது ஒரு ஆண்டினை ஆறு பொழுதுகளாக பிரிப்பது. கார் காலம், கூதிர்காலம், முன் பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் ஆகியன.


சிறு பொழுதுகள் என்பது ஒரு நாளை ஆறு பொழுதுகளாக பிரிப்பது. அவையாவன: மாலை, யாமம், வைகறை, காலை, நன்பகல், பிற்பகல்.


காலம் அறிந்து செயல்கள் இருக்கவேண்டும் என்று தமிழ் இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.


கார் என்றால் மேகம். மேகங்களால் சூழ்ந்த காலம்: ஆடி, ஆவணி (June/July/August).

கூதிர் என்றால் குளிர். கூளிர் காற்று வீசும் காலம் புரட்டாசி, ஐப்பசி (August/September/October).

முன் பனிக்காலம் என்பது விடியலில் பனி பெய்யும் காலம்: கார்த்திகை, மார்கழி (October/November/December).

பின் பனிக்காலம் என்பது காலையில் பனி பெய்யும் காலம்: தை, மாசி (December/January/February).

இளவேனிற்காலம் என்பது வசந்த காலம்: பங்குனி, சித்திரை (February/March/April)

முதுவேனிற்காலம் என்பது கோடைக் காலம்: வைகாசி, ஆணி (April/May/June).


மார்கழி, தையில் தனக்கு ஏற்ற ஆடவர்களை வேண்டி இணைவது என்றும், பங்குனி, சித்திரையில் கூடியிருந்து குளிர்ந்து இருப்பது என்றும் வகுத்திருக்கிறார்கள்.

மார்கழியில் பாவை நோன்பு. சித்திரையில் வசந்த விழா. இந்த மாதங்கள் இடத்திற்கு ஏற்றார் போல் மாறுபடும்!


சரி. இது எல்லாம் எதற்காக என்றால் என் அருமை நண்பர் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். பாவை நோன்பிற்கும் வசந்த விழாவிற்கும் என்ன சம்பந்தம் என்று. ஆகையால், திரட்டிய தகவல்கள்தான் இது! இன்பத்துப் பாலுக்கும் தொடர்புள்ள நிகழ்வுகள் என்பதால் இருக்கட்டும் என்று பொதுவில் பகிர்ந்துள்ளேன்.


ஆண்டாள் நாச்சியார் அருளிய ‘நாச்சியார் திருமொழி’ என்பது கண்ணபிரானை தன்னுடன் சேர்த்து வைக்கப் பாடிய பாடல்கள். காதல் சுவை மிக்கப் பாடல்கள். முதல் பத்து பாடல்களில் அவள் காம தேவனை அதாவது அனங்க தேவனை வேண்டுவது போல் அமைந்துள்ள பாடல்கள்.


மார்கழியில் நோன்பிருந்த ஆண்டாள் நாசியாருக்கு மார்கழி போனது, தையும் போனது. மாசியும் போய் கொண்டு உள்ளது. இப்படியே விட்டால் வசந்தமும் வந்து விடும் என்று நொந்து போகிறாள். கண்ணன் மட்டும் கைப்படவில்லை. அதை அப்படியே நாச்சியார் திருமொழியாக்கிவிட்டார்.


நாச்சியார் திருமொழியில் முதல் பாடல்:


தையொரு திங்களும் தரைவிளக்கித் தண் மண் தலமிட்டு மாசிமுன்னாள், ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித்து அனங்கதேவா, உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி உன்னையும் உம்பியை யும்தொழுதேன், வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே..” … பாடல் 1; நாச்சியார் திருமொழி தை மாதம் முழுவதும் வீடு எல்லாவற்றையும் சுத்தம் செய்து, தண்ணிரைத் தரையில் தெளித்து வைத்தேன், மாசி முதல் அழகிய நுண் மனல் (கோல மாவு) கொண்டு தெருவையே அலங்கரித்தேன் அனங்க தேவா!


என் பிரச்சனை தீராதா என்று நினைத்து உன்னை மட்டுமில்லை, உன் தம்பி (உம்பி) யையும் சேர்த்தே தொழுதேன்.


ஜம்முன்னு சுற்றும் சக்கரத்தைக் கையில் வைத்திருக்கும் வேங்கடவனுக்கு என்னை விதித்துவிடேன் என்கிறார் ஆண்டாள் நாச்சியார்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.

உங்கள் அன்பு மதிவாணன்






13 views2 comments
Post: Blog2_Post
bottom of page