தெரிதலும் தேர்ந்து ... 634
10/04/2023 (767)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்.
அமைச்சு அதிகாரத்தின் நான்காவது குறளில் “ஓருதலையாச் சொல்லலும்” என்ற குறிப்பினைத் தந்திருந்தார். காண்க 02/04/2023 (759) மீள்பார்வைக்காக.
“தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.” --- குறள் 634; அதிகாரம் – அமைச்சு
ஒரு செயலைச் செய்து முடிக்க பல வழிமுறைகள் இருப்பின், அவை அனைத்தையும் ஆராய்ந்து அதில் எது நன்மை பயக்குமோ அதைத் தெரிவு செய்தலும், அவ்வழியில் சென்றால், ஏற்படும் நல் வாய்ப்புகளை எவ்வாறு நன்றாகப் பயன்படுத்துவது என்ற செயல்வகையும், ஆராய்ந்த அந்த முடிவினைத் தலைமையிடம் குழப்பம் இல்லாமல் சொல்ல வல்லவனே அமைச்சனாவான்.
எனவே, அமைச்சு அதிகாரத்தை அடுத்து, மிக முக்கியமான அதிகாரமாகிய, சொல்வன்மையை (65 ஆவது அதிகாரம்) வைக்கிறார்.
இது நிற்க.
பதிணென் கீழ் கணக்கு நூல்கள் என்று பதிணெட்டு நூல்களைத் தொகுத்துள்ளார்கள். இந்தத் தொகுப்பு நூல்களில் உள்ள ஒவ்வொரு பாடலும் அடி அளவில் சிறியது.
இந்தத் தொகுப்பில் உள்ள நூல்கள்:
1. நாலடியார்
2. நான்மணிக்கடிகை
3. இன்னா நாற்பது
4. இனியவை நாற்பது
5. கார் நாற்பது
6. களவழி நாற்பது
7. ஐந்திணை ஐம்பது
8. ஐந்திணை எழுபது
9. திணைமொழி ஐம்பது
10. திணைமாலை நூற்றைம்பது
11. முப்பால் (திருக்குறள்)
12. திரிகடுகம்
13. ஆசாரக் கோவை
14. பழமொழி நானூறு
15. சிறுபஞ்சமூலம்
16. கைந்நிலை
17. முதுமொழிக் காஞ்சி
18. ஏலாதி
இதில் உள்ள நூல்கள் பெரும்பாலும், கிட்டத்தட்ட சங்கம் மருவிய காலத்தில், அதாவது கி.பி. 300 -600 காலம், இயற்றப் பட்டிருக்கலாம் என்றும் கணிக்கிறார்கள்.
நம் பேராசான் நமக்களித்த திருக்குறளும் இதனுள் அடங்குவதால், திருக்குறளும் காலத்திற்கு பிந்தையது என்று சிறுபான்மையினர் ஒரு வாதத்தை வைக்கிறார்கள்.
இதனை, பெரும்பாலான தமிழ் அறிஞர் பெருமக்கள் மறுக்கிறார்கள்.
“கீழ் கணக்கு” என்பது சிறிய பாடல்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் காலக்கணக்கிற்கு அது குறிப்பல்ல என்றும் அறுதியிட்டுச் சொல்கிறார்கள்.
எனவே, இதனை ஆராய்ந்த நம் தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர் ஆண்டு என்பதை நிறுவினார்கள். அதாவது, நாம், இப்போது பரவலாகப் பயன்படுத்தும் ‘கிரிகோரியன் ஆண்டு’ (Gregorian Calendar) முறையுடன் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடியிருக்கும். உதாரணமாக, இந்த ஆண்டு 2023 என்றால் திருவள்ளுவர் ஆண்டு 2054!
மேலும் தொடருவோம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
