top of page
Search

தீர விசாரித்தலே மெய்! ...

05/10/2021 (224)

தூது என்ற அதிகாரத்தில் இருந்து முதல் இண்டு குறள்களைப் பார்த்தோம். அன்புடைமை, ஆன்ற குடி பிறத்தல், வேந்தன் அவாவும் தன்மை, அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை ஆகியன அடிப்படைத் தன்மைகள் ஒரு தூதுவனுக்கு என்று எடுத்துச் சொல்லியிருந்தார் நம் பேராசான். தூதுவர்கள் வகுத்துச் சொல்பவர்கள், கூறியது கூறுபவர்கள் என்று இரு வகைப் படுவர் என்றும் பார்த்தோம்.

அடுத்து வரும் நான்கு குறள்களில் வகுத்து உரைப்பார்களுக்கு உண்டான தனி இலக்கணத்தைச் சொல்லப் போகிறார்.


அதற்கு முன்பு, ஒரு புலத்தை (subject) படிக்க வேண்டுமென்றால் முதலில் அந்தப் புலத்தில் பயன்படுத்தப்படும் சொற்களையும் (jargons) அதன் பொருள்களையும் கற்க வேண்டும். அதாங்க டிக்ஷனரி (dictionary), அகராதி படிக்கனும். அப்புறம், அந்தப் பாடத்திற்கு தேவையான தர்க்கம் (logic) படிக்கனும். அதை தமிழில் அளவையியல் என்கிறார்கள். அதன் பிறகுதான் மற்ற நூல்களைக் கற்க வேண்டுமாம்.


மறுபடியும் ஆரம்பிச்சிட்டியான்னு கேட்கறீங்களா? கொஞ்சம் பொறுமை. ரொம்ப முக்கியமான ஒன்றை ஆசிரியர் சொல்லியிருக்கிறார், அதை சொல்லப் போகிறேன்.


ஒரு கருத்தை அல்லது ஒரு உண்மையை நிறுவுவதற்கு சாட்சிகள் தேவை. சாட்சிகள், அடிப்படையில், மூன்று வகைப் படும். (பத்து வகையிருக்காம்!). நாம மூன்றை மட்டும் பார்க்கலாம்.


முதலில் காட்சி அளவை. இது கண்ணால் கண்டு நிறுவுவது (eye witness). அடுத்தது, கருதல் அளவை. இது யூகித்து நிறுவுவது. புகை இருந்தா நெருப்பு இருக்கும் என்று சொல்வது. மூன்றாவது, உரை அளவை அல்லது ஆகமப் பிரமானம். இது ஏற்கனவே, அறிஞர்களால் எழுதிவைக்கப்பட்ட உரைகளைக் கொண்டு உண்மையைக் கண்டு பிடிப்பது.


கீழ் நீதி மன்றங்களில் கண்ணால் கண்ட சாட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உயர் நீதி மன்றங்களில் சற்று அடுத்த நிலையில், காட்சியிலே பிழை இருக்குமா என்று அனுமானித்து தீர்மானிக்கிறார்கள். உச்ச நீதி மன்றத்தில், கீழமை நீதி மன்றங்கள் கண்ட உண்மைகள் ஆகமத்தோடு (constitution) பொருந்துகிறதா என்று ஆராய்கிறார்கள். அதிலேயும், தீர்வு இல்லையென்றால் அறிஞர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தேடுகிறார்கள். அதைத்தான், constitution bench (அரசியல் அமைப்பு அமர்வு) என்று சொல்கிறார்கள்.


கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்தும் பொய், தீர விசாரித்தலே மெய்!

மேற்சொன்னதில் இருந்து, நூல்கள், உரைகள் அல்லது ஆகமங்கள் ரொம்ப முக்கியம்ன்னு தெரியுது.


நூல்களிலே தேர்ச்சி இருக்கனுமாம் வகுத்துரைப்பானுக்கு! நேரமாயிட்டுது. நாளைக்கு அந்தக் குறளைப் பார்க்கலாம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன், உங்கள் மதிவாணன்.




4 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page