தொல்வரவும் தோலும் ... குறள் 1043
26/01/2022 (335)
ஒருவருடைய பண்பை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அவர்களின் சொல்லையும், செயலையும் கவனித்தாலே போதும். கண்டுபிடிக்கலாம். பண்பு இயல்பாகவும் இருக்கலாம், இருப்பினாலேயும் இருக்கலாம். அது என்ன இருப்பு? வழி வழியாக இருந்த சுற்றத்தினைப் பார்த்து, கேட்டு, அறிந்தும் வரலாம்.
இதற்கு ‘தொல்வரவு’ என்று சொல்கிறார்கள். அறிவியலில் traits are determined by genes என்கிறார்கள். அதாவது, பண்புகள் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறதாம். இது பெரும்பான்மை பற்றியது. எல்லாவற்றையும் மாற்றலாம்.
எனதருமை நண்பர் ஒரு அருமையான கருத்தைப் பதிவிட்டு இருந்தார். 10 க்கும் 40 க்கும் இடையே ஒருவரால் தன்னைச் செதுக்கிக் கொள்ள முடியவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், காலம் முடிந்துவிட்டது. இனிமேல இயலாது என்று உட்காரக்கூடாது. அவர்களையும் சேர்த்துதான் “இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்” என்று நம்பேராசான் சொல்லியிருக்கிறார். வாழும் வரை போராடு என்று அழகான ஒரு பின்னூட்டம் இட்டு இருக்கிறார்.
அதைப் போன்றுதான் மரபு வழி வரும் தொல்வரவும். இருந்தால் பயன்படுத்துவோம். இல்லாவிட்டால் உருவாக்குவோம். அவ்வளவுதானே?
‘தோல்’ என்றால் skin என்பது வழக்கில் உள்ள பொருள். ‘என்புதோல் போர்த்த உடம்பு’ என்று நம் பேராசான் குறள் 80ல் சொல்லியிருக்கிறார். சிலபோது உடம்பிற்கு தோல் என்ற சொல் ஆகி வருகிறது. நல்ல தோல் என்றால் நல்ல அழகான உடல் அமைப்பு என்றும் குறிக்கிறார்கள்.
தோலுக்கு ஒரு இலக்கணத்தை தொல்காப்பியப் பெருமான் சொல்கிறார்.
இழுமென்னும் ஒசையையுடைய மெல்லென்ற சொல்லால் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும், பரந்த மொழியால் அடிநிமிர்ந்து வரத் தொடுப்பினும் தோல் என்னும் செய்யுளாம்.
“இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்
பரந்த மொழியால் அடிநிமிரந்து ஒழுகினும்
தோலென மொழிப தென்மொழிப் புலவர்”
சுருக்கமாக, ‘தோல்’ என்றால் ‘சொல்’ என்று பொருள்படுமாம். என்ன, ஒரே விளக்கமா இருக்குன்னு நினைக்கறீங்க. குறள் தானே இதோ:
“தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.” --- குறள் 1043; அதிகாரம் – நல்குரவு
நசை = கேடு, பேராசை; நல்குரவு என்னும் நசை = வறுமை எனும் கேடு; தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக =பழைய குடிப்பண்பினையும், நல்ல சொற்களைப் பேசுவதையும் ஒரு சேரக் கெடுக்கும்.
சொல்லும் செயலும் கெட்டுப் போகும். அதனாலே, வறுமையை ஒழிக்க வேண்டும். அது எந்தப் பருவமானாலும் சரி.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
