top of page
Search

துளி இன்மை ... 557

14/01/2023 (681)

கொடுங்கோன்மை அதிகாரத்தின் முதல் குறளில் (551) மக்களைக் கசக்கிப் பிழியும் தலைமை கொலை மேற்கொண்டாரின் கொடிது என்றார். அதைத் தொடர்ந்து (552ல்) கத்தியைக் காட்டி மிரட்டி வழிபறி செய்பவர்கள் போல மக்களிடம் அநியாயமாக வரிகளைப் போட்டு அடித்துப் பிடுங்குவது கொடுங்கோன்மை என்றார்.


நாள் தோறும் மக்களின் குறைகளை நாடி முறை செய்யாவிட்டால் நாள் தோறும் நாடு கெடும் என்றார் குறள் 553ல்.


அடுத்து குறள் 554ல், ஒழுந்காக ஆட்சி செய்யவில்லை என்றால் கூழும் குடியும் ஒருங்கிழக்கும் என்றார்.


மக்களை அழவிட்டால் அதுவே தலைமையைத் தாக்கி அழிக்கும் படை என்றார் குறள் 555ல்.


தலைமை என்றாலே செங்கோன்மை இருக்க வேண்டும் என்று பொருள்படும்படி ‘மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை’ என்றார் குறள் 556ல்.


அதிகாரத்தின் ஆரம்பத்தில் கடுமையாக கடிந்த நம் பேராசான், அப்படியே, படிப்படியாக தணிந்து “நீ ரொம்ப நல்லவன் இல்லையா, அதனாலே ஒழுங்காக ஆட்சி செய் ராஜா” என்ற பாணியில் தட்டிக் கொடுத்து நேர்வழிக்கு கொண்டு வருகிறார்.


நீ யார் தெரியுமா? நீ தான் வான்மழை! மழையின் கருணை இல்லை என்றால் எப்படி இந்த உலகம் இருக்காதோ, அப்படி, உன் கருணையான அனுகுமுறை இல்லையென்றால், உன்னைத் தலைமையாக ஏற்றுக் கொண்டவர்கள் இல்லாமல் போவார்கள் என்கிறார்.


துளி இன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்

அளி இன்மை வாழும் உயிர்க்கு.” --- குறள் 557; அதிகாரம் - கொடுங்கோன்மை


துளி இன்மை ஞாலத்திற்கு எற்று? அற்றே = மழை இல்லையென்றால் இந்த உலகம் என்ன ஆகும்? அது போல;

வாழும் உயிர்க்கு வேந்தன் அளி இன்மை = தலைமையின் கீழ் உள்ளவர்களுக்கு தலைவனின் கொடுங்கோன்மை. அதாவது, கருணையற்ற அனுகுமுறை.


மழை இல்லையென்றால் இந்த உலகம் என்ன ஆகும்? அது போல, தலைமையின் கீழ் உள்ளவர்களுக்கு தலைவனின் கொடுங்கோன்மை. அதாவது, கருணையற்ற அனுகுமுறை.


மழை இல்லாவிட்டால் உலகம் அழியும்; தலைமை சரியாக இல்லாவிடின் மக்கள் துன்பப்படுவார்கள். தலைமைக்குத் தேவை கருணை.


அடுத்தக் குறளில் ஒரு ஆச்சரியமான ஒரு கருத்தை வைக்கிறாராம். அது என்னவென்றால், கொடுங்கோன்மையால் இல்லாதவனைவிட இருப்பவன் துன்பப்படுவானாம்! அது என்னவென்று நாளை பார்க்கலாம் என்றார் ஆசிரியர்.


மீண்டும் சந்திப்போம்.

நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page