நகை ஈகை இன்சொல் ... 953
25/07/2022 (514)
குடிமை அதிகாரத்தின் முதல் குறளில் (951) குடிமைக்கு செப்பம், நாணம் தேவை என்றார். செப்பம் என்றால் செம்மை, ஒழுங்கு என்று கண்டோம்.
இரண்டாவது குறளில் (952), நல் குடியில் இருக்க வேண்டுமென்றால், ஒழுக்கம், வாய்மை, நாணம் இந்த மூன்றையும் எப்போதும் கடைபிடிப்பார்கள் என்றார்.
ஒழுங்கு என்பது வேறு. ஒழுக்கம் என்பது வேறு.
ஒழுங்கா போங்க என்றால் ஒரே மாதிரியாக போங்க என்று பொருள். ஒழுங்கு என்பது செய்யும் முறை. “ஒன்றே செய்யினும் நன்றே செய்” என்பது பொருள். தெரு பெருக்குவது என்றாலும் அதை மைக்கலாஞ்சலோ எப்படி ஓவியம் வரைவாரோ அப்படிச் செய்ய வேண்டும் என்றார் மார்ட்டீன் லூதர் கிங் (Martin Luther King Jr)
“If a man is called to be a street sweeper, he should sweep streets even as a Michaelangelo painted, or Beethoven composed music or Shakespeare wrote poetry. He should sweep streets so well that all the hosts of heaven and earth will pause to say, 'Here lived a great street sweeper who did his job well.” --- Martin Luther King Jr.
“ஒருவர் தெருவைப் பெருக்க வேண்டும் என்று அழைக்கப்பட்டால், அவர் மைக்கேலாஞ்சலோ ஓவியங்களை வரைந்ததைப் போலவோ அல்லது பீத்தோவன் இசையமைத்ததைப் போலவோ அல்லது ஷேக்ஸ்பியர் கவிதைகள் எழுதியதைப் போலவோ தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும். அவர், அத் தெருக்களை நன்றாகச் சுத்தம் செய்வதைக் கண்டு இவ் உலகத்து மக்களும், வானத்து தேவர்களும் மதி மயங்கி நின்று பார்க்க வேண்டும். ‘இங்கேதான் மிகச் சிறந்த துப்புரவாளர் ஒருவர் வாழ்ந்தார்’ என்று சொல்ல வேண்டும்” --- மார்டின் லூதர் கிங் ஜூனியர்
இதுதான் ‘ஒழுங்கு’. ஒழுங்கு இருவகையாக அமையலாம். ஒன்று: வெளிப்புற காரணிகளால், இரண்டு: உள்ளுக்குள்ளேயே எண்ணிச் செய்யலாம்.
உள்ளுக்குள்ளே எண்ணுவது ஒழுக்கத்தின்பாற்படும்.
இது நிற்க.
மூன்றாவது குறளில் மேலும் நான்கு பண்புகளைப் பட்டியலிடுகிறார். அதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளொம். காண்க 06/09/2021 (195).
“நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.” --- குறள் 953; அதிகாரம் - குடிமை
வாய்மைக் குடிக்கு = வாய்மை பொருந்திய குடிக்கு; நகை = ஒருவர் உதவி நாடி வரும்போது முகமலர்ச்சியும்; ஈகை = இருப்பதை கொடுத்து உதவுதலும்; இன்சொல் = இனிய சொற்களைப் பேசுதலும்; இகழாமை = அவர்களை எள்ளி நகையாடாமல் இருப்பதும்; நான்கும் வகை என்ப= ஆகிய நான்கு பண்புகளையும் கொண்டிருத்தல் என்பர் பெரியோர்.
குடிப் பெருமை என்று பேசுபவர்கள் சிந்திக்க வேண்டிய செய்திகளை முதல் மூன்று பாட்டில் தெளிவு படுத்தியுள்ளார்.
நம்மாளு: அதாவது, ஒருத்தன் ஒரு இடத்தில் பிறந்துட்டான் என்பதாலேயே பெருமை பீத்திக்க முடியாது, சரியா ஐயா?
ஆசிரியர்: மிகச் சரி.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
