06/11/2023 (975)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இல்லறவியலில் அழுக்காறாமையைத் தொடர்ந்து வெஃகாமையை வைத்துள்ளார். வெஃகுதல் என்றால் பிறர் பொருளை மிகவும் விரும்புதல். வெஃகாமை என்பது பிறர் பொருளை விரும்பாமை. இது பொறாமையின் குழந்தை என்பதால் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.
துறவறவியலில் கள்ளாமை என்னும் அதிகாரத்தை வைத்துள்ளார். கள்ளாமையாவது பிறர்க்குரிய எந்த ஒரு பொருளையும் கவர விரும்புதலும் கவருதலுமாம்.
கள்ளாமையை ஏன் துறவறத்தில் வைத்தார்? கள்ளாமை இல்லறத்தானுக்குத் தேவையில்லையா? இல்லை இது துறவறத்தார்க்கு மிக முக்கியமானதா? இப்படிப் பல கேள்விகள எழத்தான் செய்கின்றன.
கள்ளாமை என்பது பொதுவானது. இருப்பினும், பிறன் பொருளைக் கவர்தல் என்பது போர்க்கால அறமாக இருக்கலாம். அல்லாது, விளையாட்டாகக்கூட கவர்ந்து கொள்ள முயலலாம். இஃதெல்லாம் இல்லறத்தானுக்கு விதி விலக்கு.
ஆனால், துறவறத்தில் இருப்பவர்க்கு, பொருள் இன்பங்களைத் துறந்தவர்களுக்குப் பிறன் பொருளைக் கவர்வேம் என்று நினைத்தலே பெரும் அறப்பிழையாகும். எனவே, அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க துறவறவியலில் அமைத்துள்ளாராம். இவ்வாறே வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை என்ற நான்கு அதிகாரங்களும் துறவறவியலில் அமைந்துள்ளன. இருப்பினும் இந்த ஐந்து அதிகாரங்களும் இல்லறத்தானுக்கும் பொருந்தும்.
சரி, நாம் வெஃகாமைக்கு வருவோம். இந்த அதிகாரத்தின் முதல் குறளாகச் சொல்வது பிறர்க்குரிய நல்ல பொருளை நடுவு நிலைமையில்லாமல் ஒருவன் அடைய விரும்பினால் அஃது அவனைப் பல குற்றங்களையும் செய்யத் தூண்டி அவன் குடியையும் அழிக்குமாம்.
அது என்ன நல்ல பொருள்? அது என்ன நடுவு நிலைமை? ஏன் இந்த இரண்டினையும் இணைத்தார்?
அஃதாவது, நல்ல பொருள் என்பது ஒருவர்க்கு உரித்தான பங்கு, அவர்க்கு நியாயமாகச் சேர வேண்டியது. அந்தப் பொருளை நடுவு நிலைமைத் தவறி அபகரிக்க நினைப்பவனின் குடியே தாழும் வகையில் அவனைப் பல குற்றங்களைச் செய்ய வைக்கும்.
“நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.” --- குறள் 171; அதிகாரம் – வெஃகாமை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் = ஒருவர்க்கு நியாயமாகச் சேர வேண்டிய பொருளை நடுவு நிலைமைத் தவறி அபகரிக்க நினைப்பது; குடி பொன்றக் குற்றமும் ஆங்கே தரும் = அவனின் குடியே தாழும் வகையில் அவனைப் பல குற்றங்களைச் செய்ய வைக்கும்.
பொன்ற என்பது பொன்றி என்று திரிந்து வந்துள்ளது. பொன்றல் என்றால் அழிதல், தாழுதல், குறைதல் என்று பொருள்படும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments