top of page
Search

நண்பாற்றார் ஆகி ... 988, 74, 312, 314, 987, 15/05/2024

15/05/2024 (1166)

அன்பிற்கினியவர்களுக்கு:

ஒருவர் மீது அன்பு இருந்தால் அவரைக் குறித்த ஆர்வம் ஏற்படும். ஆர்வம் வளர நட்பு பிறக்கும். அஃது அளவிறந்த சிறப்பையும் செழிப்பையும் கொடுக்கும் என்றார் குறள் 74 இல். காண்க 11/03/2021. மீள்பார்வைக்காக:

 

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு. – 74; - அன்புடைமை

 

பண்பு உடைமையில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

 

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை. – 998; - பண்பு உடைமை

 

நண்பு ஆற்றார் ஆகி = நாம் நட்பாக்கிக் கொண்ட ஒருவர், சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் நட்பென்னும் பாதையில் இருந்து நம்மிடம் இருந்து விலகி; நயம் இல செய்வார்க்கும் = நமக்கு நல்லன அல்லாதவற்றைச் செய்யும்போதும்; பண்பு ஆற்றார் ஆதல் கடை = அவர்க்கும் நம் நல்ல பண்புகளை வெளிப்படுத்தாமல் இருப்பின் அஃது நம்மை மனிதர்களுள் இழிந்தவர் ஆக்கும்.

 

நாம் நட்பாக்கிக் கொண்ட ஒருவர், சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் நட்பென்னும் பாதையில் இருந்து நம்மிடம் இருந்து விலகி நமக்கு நல்லன அல்லாதவற்றைச் செய்யும்போதும், அவர்க்கும் நம் நல்ல பண்புகளை வெளிப்படுத்தாமல் இருப்பின் அஃது நம்மை மனிதர்களுள் இழிந்தவர் ஆக்கும்.

 

சில நேரத்தில் சில மனிதர்கள்! இந்த உலகில், நம்பினவர்கள் கைவிடுவர்; தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்! அப்பொழுதுதான் நமது நல்ல பண்புகளுக்குச் சோதனைக் காலம். இவையும் உலகப் பாடே. அஃதாவது, உலக வழக்கமே. அதனை அறிந்து நாம் நல்லனவற்றைக் கைவிடாமல் ஒழுகுவதுதாம் பண்பெனப்படும்.

 

… பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல் - கலித்தொகை பாடல் 133

 

இந்தக் கருத்தினை நம் பேராசான் இன்னாசெய்யாமை அதிகாரத்திலும் மேலும் பல பாடல்கள் மூலமும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தியுள்ளார், காண்க 09/01/2024, 12/03/2021, 07/05/2024. மீள்பார்வைக்காக:

 

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள். – 312; - இன்னா செய்யாமை 

 

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். - 314; - இன்னாசெய்யாமை

 

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு. – 987; - சான்றாண்மை

 

மேலும் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




 

2 Comments


Very interesting to read interrelated kurals under various chapters.

Like
Replying to

Thanks sir

Like
Post: Blog2_Post
bottom of page