19/03/2024 (1109)
அன்பிற்கினியவர்களுக்கு:
கனவு காணும் பொழுது இன்பம் என்கிறாள். இந்த அதிகாரத்தில் நனவும் கனவும்தாம். நனவிலே இல்லை என்பதனால் கனவு காண்கிறேன். அதனால் ஓரளவு அமைதி அடைகிறேன். இன்பம் பெறுகிறேன். அந்தக் கனவிலும் அவர் சில பொழுது கண்டும் காணாமல் இருக்கிறார். இருக்கட்டுமே, கனவிலே அவரைக் காணமுடிகிறதல்லவா? பிரிந்து சென்றவர்களை சிலர் கடிகிறார்கள்! ஒரு வேளை அவர்களுக்குக் கனவில் காதலர்கள் தோன்றுவதில்லையோ? இப்படியெல்லாம், இந்த அதிகாரத்தில் பாடல்கள் இடம் பெறுகின்றன.
நனவினால் காண முடியாதவரை கனவினால் காண்பதனால் என் உயிர் இருக்கிறது என்றவள், இப்பொழுது கனவு கண்டு கொண்டிருக்கிறாள்.
நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. – 1215; - கனவு நிலை உரைத்தல்
நனவினாற் கண்டதூஉம் ஆங்கே இனிது = நாங்கள் கூடியிருந்த காலங்கள் அப்பொழுது இன்பம் பயத்தவை; கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது = கனவினில் அவரைக் காணும் பொழுதே அதே போன்ற இனிமையான இன்பம் இங்கேயும் கிடைக்கப் பெறுகிறேன்.
நாங்கள் கூடியிருந்த காலங்கள் அப்பொழுது இன்பம் பயத்தவை. கனவினில் அவரைக் காணும் பொழுதே அதே போன்ற இனிமையான இன்பம் இங்கேயும் கிடைக்கப் பெறுகிறேன்.
மேலும் தொடர்கிறாள்.
பின்பொரு நாள் வருவார். மீண்டும் பிரிவார். மீண்டும் துயரம்.
இனி நனவென ஒன்று இல்லாமலே போனால் கனவிலேயே அவரைப் பிரியாமல் காலத்தைக் கழிப்பேனே என்றும் எண்ணுகிறாள். அலைபாயும் மனத்தின் பேதைமையைப் படம் பிடிக்கிறார்.
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன். – 1216; - கனவு நிலை உரைத்தல்
நனவென ஒன்றில்லை ஆயின் = இனி, நனவு என்ற ஒன்று இல்லாமலே போனால்தான் என்ன; கனவினாற் காதலர் நீங்கலர் = அப்போதாவது, இந்தக் கனவினில் எம் காதலர் பிரியாமல் இருப்பார்.
இனி, நனவு என்ற ஒன்று இல்லாமலே போனால்தான் என்ன? அப்போதாவது, இந்தக் கனவினில் எம் காதலர் பிரியாமல் இருப்பார்.
இவையெல்லாம், கனவிலேயே சிந்தித்துக் கொண்டு இருக்கிறாள்!
திடீரென விழிப்பு வருகிறது. உறக்கம் கலைய அவன் மறைந்து போகிறான். எங்கே சென்றான் அவள் அலை பாய்கிறாள். இந்தக் கனவிலும் வந்து என்னைக் கொடுமை செய்கிறாரே என்கிறாள்.
நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மை பீழிப் பது. – 1217; - கனவு நிலை உரைத்தல்
நனவினான் நல்காக் கொடியார் = நேரிலே வந்து என் துயரைத் துடைக்க முடியாத அந்த அன்பில்லாத கொடியவர்; கனவினான் எம்மை பீழிப்பது என் = இந்தக் கனவினில் வந்து பின்னர் மறைந்து என்னைக் கொடுமை செய்வது எதனால்?
நேரிலே வந்து என் துயரைத் துடைக்க முடியாத அந்த அன்பில்லாத கொடியவர், இந்தக் கனவினில் வந்து பின்னர் மறைந்து என்னைக் கொடுமை செய்வது எதனால்?
தோழி: அவர்தாம் கொடியவர் என்று தெரிகிறதே, ஏன் உன்னால் அவரைவிட்டு விலகாமல் இருக்கிறாய்?
தோழி அவரைக் கடிவதனை அவள் விரும்பவில்லை.
என்ன சமாதானம் சொல்லப் போகிறாள்?
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments