top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

நனவினால் நல்காதவரை ... 1213, 1214, 18/03/2024

18/03/2024 (1108)

அன்பிற்கினியவர்களுக்கு:

தோழி: கனவினால் என்ன நன்மையைக் கண்டாய்? நீங்கள் கலந்திருக்க முடியுமா?

 

அவள்: நனவில் காண முடியாதவரைக் கனவில் கண்டாவது உயிர் வாழ்வேன். நிலைத்திருப்பதே பெரும் கவலையாக இருக்கும்போது

கலந்திருப்பதல்ல பெரும் கவலை. உனக்குத் தெரியாது என் நிலைமை.

 

கனவு காணுங்கள் என்றார் நம் அப்துல் கலாம். கனவு மெய்ப்பட வேண்டும் என்றார் மகாகவி பாரதி. இந்தக் கருத்துகள் அவளுக்கு முன்பே தெரிந்துள்ளன போலும்.

 

அவள் காணும் கனவுகள்தாம் அவளின் உயிர்நிலையை அவளிடமே தக்க வைத்துள்ளன என்பதுதான் உண்மை. அவர் திரும்பி வரும்வரை காலத்தை ஓட்ட வேண்டாமா?

 

நனவினால் நல்காதவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர். – 1213; - கனவு நிலை உரைத்தல்

 

நனவினால் நல்காதவரை = நேரில் வந்து அன்பினை நல்க முடியாத அவரை; கனவினால் காண்டலின் உண்டு என் உயிர் = கனவினில் காண்பதனால்தான் என் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. 

 

நேரில் வந்து அன்பினை நல்க முடியாத அவரைக் கனவினில் காண்பதனால்தான் என் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. 

 

கனவினில் மயங்கினால் நனவு போல ஒரு மாயையைத் தோற்றுவிக்கும். அதுவும் ஒரு சுகமே!

 

அவள்: இந்தக் கனவுகள் இருக்கிறதே அவை என்ன செய்கின்றன தெரியுமா? அவர் நேரிலே வந்து அன்பு செய்ய இயலாத காரணத்தால், அவரை நாடிச் சென்று அவர் அளிக்கும் இன்பங்களை அப்படியே அள்ளிக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கின்றன.

 

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு. – 1214; - கனவு நிலை உரைத்தல்

 

நனவினான் நல்காரை = நேரிலே வந்து அன்பு செய்ய இயலாத காரணத்தினால் அவரை; நாடித் தரற்கு = நாடி, எனக்குத் தருவதற்காக அவர் அளிக்க வேண்டிய இன்பங்களை அவரிடம் இருந்து அள்ளிக்கொண்டு வந்து தருவதனால்; கனவினான் காமம் உண்டாகும் = கனவினாலும் இன்பம் உண்டாகிறது.

 

நேரிலே வந்து அன்பு செய்ய இயலாத காரணத்தினால் அவரை நாடி, எனக்குத் தருவதற்காக அவர் அளிக்க வேண்டிய இன்பங்களை அவரிடம் இருந்து அள்ளிக்கொண்டு வந்து தருவதனால், கனவினாலும் இன்பம் உண்டாகிறது.

 

கனவு காணும்போது இன்பம் என்று தொடர்கிறாள் அடுத்த குறளில்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Commentaires


bottom of page