top of page
Search

நன்னீரை வாழி ... 90, 1111

15/09/2022 (564)

அனிச்சம், அனிச்சை என்ற சொற்களால் அழைக்கப்படும் ‘பூ’ வகை சங்க காலத்தில் இருந்ததாக சங்கப் பாடல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.


இந்தப் ‘பூ’ மிகவும் மென்மையானதாம். அதுவும் எப்படி? முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம்! அவ்வளவு மெல்லிய மலராம் இது.


இது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.


நம் பேராசான், அனிச்சப் பூவை நான்கு குறளில் பயன்படுத்தியுள்ளார்.


விருந்தோம்பலில் (9ஆவது அதிகாரம்) முடிவுரையாகச் சொல்கிறார் இவ்வாறு:


மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.” --- குறள் 90; அதிகாரம் – விருந்தோம்பல்


அனிச்சம் மோப்பக் குழையும் = அனிச்சப் பூ முகர்ந்து பார்த்தாலே வாடிவிடும் தன்மைத்து;

முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து = (அது போல) நம்மை நாடி வரும் விருந்தினர்களும், நம் முகத்தில் சிறிது மாறுபாடு தோன்றுமானால் வாடி விடுவார்கள்.


அதாவது, விருந்தினர்களை முகம் வாடாமல் உபசரித்து அனுப்புவது என்பது ஒரு நல்ல பண்பு என்கிறார் நம் பேராசான்.


ம்ம்… இதெல்லாம் அந்தக் காலம்ன்னு சொல்வது காதில் விழுகிறது. இருப்பினும், சிலர் இன்னும் விருந்தோம்பி இருப்பதையும் மறுப்பதற்கில்லை. முயற்சி செய்வோம் நாமும்.


இது நிற்க.


புணர்ச்சி மகிழ்தலுக்கு (111ஆவது) அடுத்த அதிகாரம் நலம் புனைந்து உரைத்தல் (112 ஆவது).


மகிழ்தல் உள்ளுக்குள் நிகழ்ந்தது. கத்திரிக்காய் முளைத்தால் கடைத் தெருவிற்கு வர வேண்டியதுதானே! அது போல, அவனின் மகிழ்ச்சியை கூட்டியும், மறைத்தும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிலை இது. அதனால், புணர்ச்சி மகிழ்தலுக்கு பின் இந்த அதிகாரம்.


முதல் குறளிலே அவன் சொல்வது:


“நான் தடுமாறி, தடம் மாறி அவளிடம் வீழ்ந்துவிட்டேன். அந்த என்னவள் இருக்கிறாளே, அவள் எப்படிப்பட்டவள் தெரியுமா? அவள், மிகவும் மெல்லியலாள்!”


யாரிடம் சொல்கிறான் என்பதுதான் முக்கியம். இதனை, அந்த அனிச்ச மலரிடமே சொல்கிறான்.


அதுவும் எப்படி? “அனிச்சமே நீ நல்லாயிரு! (ஆனால்) உனக்கு ஒன்று தெரியுமா? என்னவள் உன்னைவிட மெல்லியள்.”


அவன் சொல்லாமல் சொன்னது: அனிச்சமே உனக்குத் தலைக்கனம் தேவையில்லை. உன்னைவிட என்னவள்தான் மெல்லியலாள்!


நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்.” --- குறள் – 1111; அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்


மற்ற பூக்களிடமிருந்து தனிப்பட்ட இயல்பினைக் கொண்ட அனிச்சமே நீ வாழ்க! ஆனால், உனக்கு சொல்கிறேன். உன்னைவிட, என்னவள்தான் மெல்லிய இயல்பினைக் கொண்டவள். ஆகையால், நீ ரொம்ப அலட்டிக்காதே.


நீரை = இயல்பு; நன்னீரை அனிச்சமே வாழி = மற்ற பூக்களிடமிருந்து தனிப்பட்ட இயல்பினைக் கொண்ட அனிச்சமே நீ வாழ்க!;

நின்னினும் மென்னீரள் யாம் வீழ்பவள் = (ஆனால், உனக்கு சொல்கிறேன்) உன்னைவிட, என்னவள்தான் மெல்லிய இயல்பினைக் கொண்டவள். (ஆகையால், நீ கர்வம் கொள்ளத் தேவையில்லை)


நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.




 
 
 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page