நன்மையும் ... 511
09/12/2022 (645)
திருக்குறள் ஒரு அற நூல்.
அறம் எது என்று கேட்டால்:
விதித்தன செய்தல்; விலக்கியன ஒழித்தல்; அவ்வளவே.
இதைத்தான் நம் பேராசான், நம் மீது கருணை கொண்டு 1330 பாடல்களில் விளக்குகிறார்.
தெரிந்து வினையாடலில் (52 ஆவது அதிகாரம்) முதல் குறளில் சொல்லும் செய்தியும் இதுதான்.
ஒருவரை தெரிந்து தெளிந்து பணிக்கு அமர்த்தியாகிவிட்டது.
அதன் பிறகுஅவர்கள் செய்யும் வேலையை எப்படி ஆராய்வது? அவர்களை, மேலும், தொடர்ந்து எப்படி வழி நடத்துவது? என்ற கேள்வியில் இருந்து ஆரம்பிக்கிறார். தற்போது, நிறுவனங்களில், appraisal (மதிப்பீடு) என்கிறார்களே அதுதான் இது.
அதாவது, கொடுத்த வேலையின் நோக்கம் என்ன என்பதைத் தெரிந்து செய்கிறார்களா என்பது முதல் கேள்வி.
கொடுத்த வேலையைச் செய்யனும். அதற்கு சற்றும் தேவையில்லாத செயல்களைச் செய்யக் கூடாது. இதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அறம்.
“நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப் படும்.” --- குறள் 511; அதிகாரம் – தெரிந்து வினையாடல்
நன்மையும் தீமையும் நாடி = ஒரு செயலின் நோக்கம், அதாவது பயன் என்ன என்பதையும், அதை ஒழுங்காகச் செய்யாவிட்டால் அதனால் வரும் விளைவுகள் என்ன என்பதையும் ஆராய்ந்து;
நலம் புரிந்த தன்மையான் ஆளப்படும் = பயன் தரும் பணிகளைச் செய்கின்றார்களா என்பதை கவனித்து ஒருவரை வழி நடத்த வேண்டும்.
ஒரு செயலின் நோக்கம், அதாவது பயன் என்ன என்பதையும், அதை ஒழுங்காகச் செய்யாவிட்டால், அதனால் வரும் விளைவுகள் என்ன என்பதையும் ஆராய்ந்து; பயன் தரும் பணிகளைச் செய்கின்றார்களா என்பதை கவனித்து ஒருவரை வழி நடத்த வேண்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
