06/05/2022 (434)
“தீதும் நன்றும் பிறர் தர வாரா” … கணியன் பூங்குன்றனார்
ஊழ் அதிகாரம் முழுவதும் அறிவுரைதான்; அதுவும் எச்சரிக்கையாக! உலகத்தின் இயற்கையை புரிந்து கொண்டால் அமைதி பெறலாம்.
எல்லாம் நல்லவைகளாக நடக்கும்போது பெருமகிழ்வும், பெருமிதமும் கொள்ளாதவர்கள், மாறி நடக்கும் போதும் மனம் தளரமாட்டார்களாம்.
“நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன்.” ---குறள் 379; அதிகாரம் – ஊழ்
நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் = நல்ல செயல்கள் நடக்கும்போது அதனால் வரும் இன்பங்களை பெரும் பொருட்டாக மதித்து அனுபவிப்பர்;
அன்று ஆங்கால் அல்லற் படுவது எவன் = துன்பம் தரும் நிகழ்வுகள் நடக்கும்போது மட்டும் அதையும் அவ்வாறே ஏற்றுக்கொள்ளாது அரட்டுவது ஏன்?
நம்மாளு: இனிப்பு என்றால் இனிக்கத்தானே செய்யும்; கசப்பு என்றால் முகம் சுளிக்கத்தானே செய்யும். இதுதானே இயல்பு? அதைவிட்டு விட்டு இனிப்பிற்கும், கசப்பிற்கும் முகம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் எப்படி?
ஆசிரியர்: நிச்சயமாக, நியாயமான ஒரு கேள்விதான் இது. வள்ளுவப் பெருமானும் அதை மறுக்கவில்லை. ஆனால், நாக்கிலே இருக்கும் சுவை எப்படி தொண்டைக் குழிக்கு கீழே சென்றவுடன் எந்த ஒரு சுவையும் இல்லாமல் போகிறதோ, அதே போல,எந்த விளைவுகளின் அனுபவங்களும் மனதிற்குள் செல்லும்போது நடுவுனிலைமையாகச் செல்லட்டும் என்கிறார்.
உணவுகளுக்கு அந்த மாதிரி ஒரு பாதையை வைத்த இயற்கை, உணர்வுகளுக்கு ஒரு பாதையை வைக்கவில்லை. அதை நம்மிடமே விட்டு விட்டது. அதையும் வைத்திருந்தால் நாமெல்லாம் இயந்திர மனிதர்களாக (robot க்களாக) இருந்திருப்போம். வாழ்க்கை இனிக்காது!
வரும் கண்டுபிடிப்புகளெல்லாம், நம்மை மேலும் இயந்திர மயமாக்குவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் ஆசிரியர்.
சிந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments