top of page
Search

நன்றாற்றல் உள்ளும் ... 469

30/10/2022 (606)

அரக்க, பரக்க, வியர்க்க, விறுவிறுக்க அந்த அலுவலகத்திலே வேலை செய்கிற ஒருத்தர் உள்ளே நுழைஞ்சார். கிட்டத்தட்ட மணி பன்னிரண்டு ஆகப் போகிறது.


அலுவலகத்தின் உள்ளே, அவரின் மேலாளரோ, (manager ன்னு தமிழில் சொல்வாங்க) “வரட்டும் அந்த லோகு. இன்றைக்கு இரண்டிலே ஒன்று பார்த்துடனும். ஏதோ, பத்து, பதினைந்து நிமிடம் எப்போதும் தாமதமாக வருவாரு. பரவாயில்லைன்னு பார்த்தா இன்றைக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் ஆயிடுச்சு. இன்னும் அவரைக் காணலை” ன்னு கருவிட்டு இருக்கார்.


அவரின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “அவர் எட்டு மணிக்கே கிளம்பிட்டாரே” என்று பதில் வந்தது. ‘சரி’ என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார்.


“அவர் வந்தால் என்னை உடனே வந்து பார்க்கச் சொல்லுங்க” ன்னு நம்ம “லேட்” லோகுவின் (அதாங்க அவர் எப்பவும் லேட்டாக வருவதால் அவர் பெயரே “லேட்” லோகு ஆயிட்டுது) பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவரிடம் சொல்லிட்டு அந்த மேலாளர் அவரின் அறைக்குள் சென்று புகைந்து கொண்டார்.


பக்கத்து ஸீட் பரமசிவத்துக்கு ஒரே மகிழ்ச்சி. இருக்காதே பின்னே? “நம்ம “லேட்” இனிமேலே எப்பவும் “லேட்” தான். கொன்னுடுப்போறான் மனுசன். வந்தவுடன் நல்லா ஒரு பீதியைக் கிளப்பி அனுப்பனும்” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு மகிழ்ந்து கொண்டுள்ளார்.


நம்ம லோகுவோ, உள்ளே நுழைந்தவுடன் நேராக மேலாளர் அறைக்குச் சென்றுவிட்டார். பக்கத்துச் ஸீட் பரமுவிற்கு ஆகப் பெரிய வருத்தம். இருக்கட்டும், எப்படியும் இன்றைக்கு அவன் காலியாயிடுவான் என்பதில் பரமுவிற்கு ஒரு சந்தேகமும் இல்லை.


கொஞ்ச நிமிடங்களில், புன்னகைத் தவழ நம்ம லோகு, மேனேஜரின் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் குடித்துக் கொண்டே, ரொம்ப நிதானமாக வந்து அவரின் இருக்கையில் அமர்ந்தார்.


பரமுவிற்கு “இது என்னடா அதிசயம்” ன்னு தோண, “ஏண்டா லோகு, என்னாச்சு?” என்றார்.


“ஓன்றுமில்லை, இன்றைக்கு நான் வருகிற வழியிலே இரண்டு நல்ல காரியங்களைச் செய்ததால் தாமதம்ன்னு சொன்னேன்.” என்னவென்று கேட்டார். சொன்னேன்.


என்னை உட்காரவைத்து, அவரின் தண்ணிர் பாட்டிலைக் கொடுத்து "முதல்ல தண்ணீர் குடிங்க. அப்புறம் வேலையைப் பார்க்கலாம்” என்றார்.


நான்தான், “இல்லை, இல்லை சார், நிறைய வேலை இருக்குன்னு வந்துட்டேன். வரும்போது பாரு, மறதியாக, அவர் பாட்டிலையும் வேற எடுத்து வந்துட்டேன்.”


பரமுவிற்கோ மண்டை வெடிக்குது. “அப்படி என்னடா செய்தே?”


லோகு: முதலில், வரும் வழியில் இருந்த ஒரு பெரிய கல்லில் தடுக்கி நிறைய பேர் விழுவதைப் பார்த்தேன். சரி, நம்மால் ஆனது என்று அந்தக் கல்லை, ரொம்பவும் முயன்று எடுத்து அப்பால் தூக்கிப் போட்டேன்.


பரமு: அப்புறம்?


லோகு: அப்புறம், ஒருத்தருக்கு மண்டையிலே அடிபட்டு ஒரே ரத்தம். அவரைக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்தேன். அதான் இவ்வளவு தாமதம்.


பரமு: ரொம்ப நாளைக்குப் பிறகு நல்ல காரியங்கள் செய்திருக்கிறாய். மகிழ்ச்சி. சரி, எப்படி லோகு அந்த ஆளுக்கு அடிபட்டுது?


லோகு: அதை ஏன் கேட்கிற. நான் அந்தக் கல்லை தூக்கிப் போட்டேனா? அது நேராகப் போய் அந்த ஆளு மண்டையிலேதான் விழுந்தது!


பரமு: ???


இது நிற்க.


அடுத்தவருக்கு இரங்குவது என்பது ஒரு நல்ல குணம்தான். இருந்தாலும், உதவப்போய், உபத்திரவம் வாங்கிவரும் நிகழ்வுகளும் இருக்கத்தானே இருக்கு.


அதனாலே, நம்ம பேராசான் என்ன சொல்கிறார் என்றால், நீ ஒருவருக்கு நன்மையே செய்தாலும் அதனால் உனக்குத் துன்பம் விளையவும் வாய்ப்பிருக்கு. அதனாலே, “யாருக்கு உதவுகிறோம் என்பதை நன்றாக ஆய்ந்து செய் தம்பி” என்கிறார்.


நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந்து ஆற்றாக் கடை.” --- குறள் 469; அதிகாரம் – தெரிந்து செயல் வகை


அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை = உதவி பெறுபவர்களின் பண்பு, குண நலன்கள் என்னவென்று ஆராயாமல் அவர்களுக்கு உதவி செய்தால்;

நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு = அந்த நன்மைகளே நமக்குத் தீமையாக மாறவும் வாய்ப்புண்டு.


நன்றாற்றல் = கொடுப்பது, இன்சொல் சொல்வது முதலியன.


இது முக்கியமாக, அந்தக் காலத்தில் இருந்த அரசர்களுக்குச் சொன்னது.


இருப்பினும், நம் உலகியலில் இதன் பொருளை விளங்கிக் கொள்ள பல்வேறு வாய்ப்புகளை, இந்த வாழ்க்கை நமக்குக் கொடுப்பதை நாம் அனுபவிக்காமல் போவதில்லை.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்


பி.கு: மேலே சொன்னக் கதைக்கும், இந்தக் குறளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா என்ன?




3 views1 comment
Post: Blog2_Post
bottom of page