28/11/2023 (997)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஒப்புரவு ஒழுகுபவர்க்குத் தடைக்கற்களும் படிக்கற்களாகும் என்றார். செல்வம் சுருங்கிய காலத்தும் அவர்கள் தங்கள் இயல்பான அறிவைப் பயன்படுத்தி வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்றார். ஆகவே, அவர்களுக்குச் செல்வம் சுருங்குவது வறுமையன்று. அவர்கள் எப்போது வறுமையை உணர்வாரக்ள் என்றால் தங்களால், ஏதோ ஒரு காரணத்தால், தக்கார்க்கு உதவ முடியாமல் போகும்போதுதான் அவ்வாறு மனம் துன்பப்படுவார்கள்.
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீர
செய்யா தமைகலா வாறு. – 219; - ஒப்புரவு அறிதல்
நயனுடையான் = ஒப்புரவு ஒழுகுபவர்; நல்கூர்ந்தான் = வறுமையுடையவர்; ஆதல் = ஆதல்; செயும் நீர செய்யாது அமைகலாவாறு = (எப்போது எனில்) அவர்கள் செய்து கொண்டிருக்கும் ஒப்புரவு ஏதோ ஒரு காரணத்தால் செய்ய முடியாமல் போகும் போது.
ஒப்புரவு ஒழுகுபவர் வறுமையுடையவர் ஆதல் எப்போது எனில் அவர்கள் செய்து கொண்டிருக்கும் ஒப்புரவு ஏதோ ஒரு காரணத்தால் செய்ய முடியாமல் போகும் போது.
அவர்கள் ஒப்புரவு ஒழுகுவதைச் செல்வக் குறைவு தடுத்துவிட முடியாது என்று குறள்கள் 218, 219 மூலம் தெளிவாக்குகிறார்.
அடுத்து முத்தாய்ப்பாக ஒன்றைச் சொல்லப் போகிறார்.
ஒப்புரவினால் தங்களுக்கு பொருள் குறை நேர்ந்துவிடும் என்று ஒருவர் சொன்னால் அதனைத் தடுக்க தன்னைக் கொடுத்து தன் உயிரையும் விற்றாவது ஒப்புரவை ஒழுகலாம்!
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. – 220; ஒப்புரவு அறிதல்
ஒப்புரவினால் கேடு வரும் எனின் = உலகத்தார்க்கு ஒத்திசைவாய் இருப்பதால் செல்வக்குறை தமக்கு நேர்ந்து விடும் என்றால்; அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து = அதனைத் தடுக்க ஒருவன் தன்னை விற்றாவது ஒழுகலாம்.
உலகத்தார்க்கு ஒத்திசைவாய் இருப்பதால் செல்வக்குறை தமக்கு நேர்ந்து விடும் என்றால் அதனைத் தடுக்க ஒருவன் தன்னை விற்றாவது ஒழுகலாம்.
ஒப்புரவு தன்னினும் மேலாக ஒழுகத்தக்கது என்கிறார்.
என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள்
எண்ணுமுன்னே பொன்னும் கொடுப்பான்
பொருள் கொடுப்பான் போதாது போதாதென்றால்
இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன்
தன்னைக் கொடுப்பான் தன்னுயிரும்தான் கொடுப்பான் தயாநிதியே
ஆ..ஆ..ஆ…ஆ.. --- கவியரசு கண்ணதாசன்; கர்ணன் (1964)
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments