நயனிலன் நயன்சாரா ... 193, 194
17/11/2021 (267)
பயனில சொல்லாமை என்ற அதிகாரத்திலிருந்து முதல் இரண்டு குறள்களை நேற்று பார்த்தோம்.
நம் பேராசான் முதல் ஆறு குறள்களில், பல்லார் முன் பயன் இல்லாமல் பேசும் பேச்சினால் வரும் குற்றங்களைச் சொல்கிறார். நாமும் தொடருவோம்.
ஒருவன், அறிவுடைச் சான்றோர்களின் அவையில், விரும்பத்தக்கவனா இருப்பானா, இல்லையா என்பதைக் கண்டு பிடிப்பது எப்படி?
அதற்கு ஒரு குறிப்பைக் காட்டுகிறார் நம் பேராசான். அவன் இரண்டு வேலையைச் செய்வானாம். ஒன்று, பயன் இல்லாதவற்றைப் பேசுவானாம். இரண்டு, அதையும் ரொம்பவே விரித்துப் பேசுவானாம்.
நாம சொல்லுவோம் இல்லையா, உப்புச்சப்பு இல்லாத விஷயத்தை உருட்டிட்டு இருக்கு நம்ப மீடியா (media)ன்னு, அதைப் போல! ஒன்றுக்கும் பயனில்லாத செய்தியை ரொம்பவே நீட்டி முழக்கினால் யாருக்குத்தான் பிடிக்கும்?
“நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.” --- குறள் 193; அதிகாரம் – பயனில சொல்லாமை
பாரித்து = விரித்து, நீட்டி முழக்கி; பயனில பாரித்து உரைக்கும் உரை = பயனில்லாதவற்றை விரித்துப் பேசுவது; நயம் = நடுவுனிலைமை தவறாதது, விரும்பத்தக்கது; நயனிலன் =நயம் இல்லாதவன்;நயனிலன் என்பது சொல்லும் = (அவன்) விரும்பத்தகாதவன் என்பதைச் சொல்லும்.
அந்த மாதிரி பேசிக்கொண்டிருப்பவன் என்ன ஆவானாம் தெரியுங்களா?
பேசியேக்கெட்டான்னு சொல்லுவோம் இல்லையா அந்த மாதிரி அவன் கெட்டுப்போவானாம். நம்ம வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார்.
“நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.” --- குறள் 194; அதிகாரம்–பயனில சொல்லாமை
பயன் சாராப்பண்பு இல் சொல் பல்லார் அகத்து = பயன்படாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடமும் பேசினால்; நயன்சாரா நன்மையின் நீக்கும் = நடுவு நிலைமையைச் சாராது (பேசுவதினால்) நன்மைகளில் இருந்து அவன் விலக்கப் படுவான்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
