31/07/2022 (520)
‘நாரின்மை’ என்றால் ‘அன்பு இல்லாமை’ என்று நமக்கு இப்போது தெரியும்.
மனதிலே ஈரம் இல்லையென்றால் மற்றவர்க்கு உதவ மாட்டார்களாம்; வாயிலிருந்து சுடு சொற்கள் வருமாம்; இப்படி இன்னபிறவும் தொடருமாம்.
ஒரு நல்ல குடியில் தொடருபவனுக்கு அந்தக் குடி நலத்தின்கண் நாரின்மை தோன்றினால் அவன் உண்மையிலேயே அந்த குலத்தில்தான் இருக்கிறானா இல்லை தப்பி அங்கே வந்து சேர்ந்துட்டானா என்று பலருக்கும் சந்தேகம் வந்துவிடுமாம்.
“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.” --- குறள் 958; அதிகாரம் – குடிமை
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் = தன் குடி மேல் அன்பில்லாமை ஒருவனுக்கு தோன்றிவிட்டால்;
அவனைக் குலத்தின்கண் ஐயப் படும் = அவன் அந்த குலத்தில் தப்பி வந்துவிட்டானா என்று இந்த உலகம் சந்தேகத்தோட பார்க்குமாம்.
இது நிற்க.
கண்ண பரமாத்மாவின் அறிவுரைப்படி, குந்தி தேவியார், தான் யார் என்பதை தெளிவு படுத்தி கர்ணனை பாண்டவர்கள் பக்கம் இருக்குமாறு வேண்ட அவனைச் சந்திக்கிறாள். சந்தித்து தான் யார் எனபதை எடுத்துச் சொல்லி தன்னுடன் வருமாறு அழைக்கிறாள். அதற்கு, கர்ணன் என்ன சொல்கிறான் என்பதை வில்லிப்புத்திரார் விரிக்கிறார்.
அம்மா, நீ ஏன் அப்படிச் செய்தாய் என்று தெரியவில்லை! பெற்றத் தாய் தன் குழந்தையிடம் அன்பு பாராட்டாமல் இருக்க மாட்டாள் அம்மா!
அன்பு என்பது உன்னிடம் இல்லாமலே போனதோ?
இல்லை, உன்னை எல்லோரும் பழிப்பார்கள் என்று அஞ்சி விட்டு விட்டாயோ? எனக்குத் தெரியவில்லை அம்மா.
ஆனால், ஒன்று சொல்வேன் அம்மா! அன்றைய நாள் தொடங்கி, எனக்கு இன்றளவும் தோற்றமும் ஏற்றமும் தந்தவன் துரியோதனன்.
அம்மா, என்னை ஆருயிர் துணையாக கொண்டு எனக்கு மகுடம் சூட்டி, அரசை அளித்து, கூட உண்டு, அவன் தம்பிமார்களும் ஏனைய அனைவரும் அவனை எப்படி வணங்கிப் பணிவார்களோ அதே போல் என்னிடமும் இருக்கச் செய்து எனக்குத் தோற்றமும் ஏற்றமும் அளித்தவன் துரியோதனன்.
“பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ?' அன்றி, பெரும் பழி நாணியோ? விடுத்தீர்; அற்றை நாள் தொடங்கி, என்னை இன்று அளவும், ஆர் உயிர்த் துணை எனக் கருதி, கொற்ற மா மகுடம் புனைந்து, அரசு அளித்து, கூட உண்டு, உரிய தம்பியரும் சுற்றம் ஆனவரும், என் அடி வணங்க, தோற்றமும் ஏற்றமும் அளித்தான்.” --- பாடல் 251, கிருட்டிணன் தூதுச் சருக்கம், வில்லி பாரதம்.
அம்மா, இன்னமும் சொல்வேன் என்றான் கர்ணன். தொடருவோம்.
இது நிற்க.
நாரின்மையால் குந்தி தேவியார் பெட்டியில் வைத்து விட்டு விட்டாரோ அல்லது பழிக்கு அஞ்சி எறிந்துவிட்டாரோ? என்ன ஒரு கேள்வி.
கர்ணனைக் கேள்விக்குறியாக்கிய கேள்விக்கு பதிலாக ஓரு எதிர் கேள்வி!
இப்போது, நாம் மேலே கண்ட குறளை மறுபடியும் வாசித்துப் பாருங்க.
ஏதாவது புதிதாக பொருள் தோன்றலாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments