02/05/2022 (430)
முன்னேற முயன்று கொண்டு இருக்கிறான் (371); அறிவு அகற்று கொண்டு இருக்கிறது (372); உண்மை அறிவு வெளிப்படுகிறது (373); தெள்ளியராகிறான் (374); இது எல்லாம் நம் பேராசான் காட்டும் குறிப்புகள். எதற்கு? ஒருவனிடம் ஆகூழ் இயங்க ஆரம்பித்துவிட்டது என்பதற்கு.
ஒரு கதை: பல்லி ஒன்று ரொம்ப பரபரப்பா ஒரு சுவரில் இங்கேயும் அங்கேயும் ஒடிட்டு இருந்துதாம். வயசான பல்லி ஒன்று அதைப் பார்த்துட்டே இருந்துதாம். ஒடிட்டு இருக்கும் பல்லியை அது கூப்புட்டுசாம்.
நான் ரொம்ப முக்கியமான் வேலையிலே இருக்கேன் என்னாலே வரமுடியாது. எதுவாக இருந்தாலும் அங்கேயே இருந்து சொல்லுங்கன்னுச்சாம். ஒன்னுமில்லடாப்பா, நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னுதான் கேட்கனும். என்ன பண்ணிட்டு இருக்கே நீன்னு கேட்டுச்சாம்.
ஒடிட்டு இருக்கும் பல்லிக்கு பயங்கர கோபம் வந்துடுச்சாம். பார்த்தா தெரியலை. இந்த சுவர் பயங்கரமா சாய்ஞ்சுட்டு இருக்கு. அதான் நான் இங்கேயும் அங்கேயும் போய் தாங்கிட்டு இருக்கேன்னுச்சாம்!
இது மாதிரி தான் நாம் பல சமயம் நினைத்துக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கிறோம். இது நிற்க.
‘துப்பறியும் சாம்பு’ என்ற நாவலை தேவன் என்ற பெயரில் மகாதேவன் (1913-57) ஆனந்த விகடன் ஆசிரியராக பணியாற்றினார்) என்பவர் எழுதியதை பலரும் படித்திருக்கலாம். அதில் சாம்பு எது பண்ணாலும் அது நல்லதாகவே முடியும். அது சாம்புவுக்கே அதிசயமாக இருக்கும். நகைச்சுவையான நாவல். ஆனால், அதுதான் உலகம்.
அந்த மாதிரி, இயற்கையாகவே பல நிகழ்வுகள், நம்ம வாழ்க்கையிலே நடந்து கொண்டு இருக்கும். ஏன் அந்த மாதிரி நடந்ததுன்னா பதில் இருக்காது.
நாம ஒரு Plan (திட்டம்) பண்ணிட்டு போவோம். நாமளே, அதை விட்டுட்டு வேற செய்துட்டு வருவோம். அதுவும் சரியாகத்தான் இருக்கும்!
நம் பேராசான் என்ன சொல்கிறார் என்றால், நாம தனித்து இயங்கலை. நம் செயல்கள் எல்லாம் கூட்டு எண்ணங்களால்தான் உருவாகுது. அதை நீங்க எல்லாம் புரிஞ்சுக்கோங்க என்கிறார்.
நாம் குறளுக்கு வருவோம். ஒருத்தனுக்கு பொருள் வந்து சேரனும் என்றால் அவன் எது பண்ணாலும் வந்து சேர்ந்துடுமாம்.
“நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.” --- குறள் 375; அதிகாரம் - ஊழ்
செல்வம் செயற்கு = பொருள் செய்வதற்கு; நல்லவை எல்லாம் தீயவாம் = நல்ல செயல்களும் பலனை கொடுக்காமல் போவதுண்டு; தீயவும்நல்லவாம் = நாம நன்மை பயக்காது என்று நினைக்கும் செயல்களும் பலன் அளிப்பதுண்டு.
இது எல்லாம் குறிப்புகள்தான். இவ்வாறு மாறி நிகழ்ந்தால் நாம்தான் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். காலமோ (time), இடமோ(space), அல்லது கருவியோ (tools) ஒத்துழைக்கவில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
நான் கொள்கைக் குன்று. முன் வைத்தக் காலை பின் வைக்க மாட்டேன் என்றால் நான் என்ன செய்வது என்கிறார் நம் பேராசான்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comentários