நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை...460
27/03/2022 (394)
சிற்றினம் சேராமையில் கடைசிக் குறள். முடிவுரையாகச் சொல்கிறார் நம் பேராசான். இரண்டு இரண்டாகப் பகுப்பதில் வல்லவர் நம் பேராசான்.
நம்மை உயர்த்துவது ‘துணை’ என்றும், தாழ்த்துவது எது என்றாலும் பகை என்றும் கொளல் வேண்டும்.
அம்முறையிலே, நல்லினம் நமக்குத் துணை; சிற்றினம் நமக்குப் பகை. துணையினால் நன்மை விளையலாம். தீமை விளையாது.
சிற்றினத்தால் தீமையைத் தவிர நன்மை விளைய வழியில்லை.
விதிக்கும் மதிக்கும் என்ன வித்தியாசம் என்று ஆசிரியர் கேட்டார்.
நம்மாளு: ‘ங்கே’… தெரியலையே ஐயா.
ஆசிரியர்: நாம் சந்திக்கும் நிகழ்வுகள் எல்லாம் ‘விதி’; அதை எதிர்கொள்ளும் விதம்தான் ‘மதி’.
அந்த choice (தேர்வு) நம்ம கிட்டத்தான் இருக்கு. பணிந்து போகிறோமா? துணிந்து நிற்கிறோமா? என்பதுதான் கேள்வி.
நம்மாளு: சரி ஐயா. ஆனால், எப்படி ஐயா சரியானதைத் தேர்வு செய்வது?
ஆசிரியர்: ‘தீ’ சுடும் என்று யாராவது சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம். இல்லை, இல்லை நான் அனுபவித்துதான் தெரிந்து கொள்வேன் என்றால் முயன்று கொள்ளலாம். அந்த வேதனைகள் நமக்கெல்லாம் வரக்கூடாது என்ற கருணையோடு நம் வள்ளுவப் பெருந்தகை குறள்களை எழுதி வைத்துள்ளார்.
அறிவு இருவகைப்படும். அஃதாவது: படிப்பறிவு, பட்டறிவு. ஏதோ ஒரு வகையில் அறிந்து கொண்டு மாற்றிக் கொள்ள வேண்டும்.
சரி குறளுக்கு வருவோம். இன்றைய குறள்:
“நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.” --- குறள் 460; அதிகாரம் – சிற்றினம் சேராமை
நல்லினத்தைவிடச் சிறந்த துணையும் இல்லை; சிற்றினத்தைப் போல பகையும் இல்லை
ஊங்கு = மேலான, சிறந்த; நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை = நல்லினத்தைவிட சிறந்த துனையில்லை; தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் = சிற்றினத்தைப் போல பகையும் இல்லை
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
