05/12/2023 (1004)
அன்பிற்கினியவர்களுக்கு:
நம் பேராசான் “அஃதே துணை” என்று மூன்று குறள்களை முடிக்கிறார். அஃதாவது, எப்படிப் பார்த்தாலும் நான் முன்னர் சொன்னேன் இல்லையா அதுதான் எல்லாவற்றிற்கும் துணை என்று மூன்று குறள்களில் சொல்கிறார். மிக முக்கியமான மூன்று குறள்கள் அவை.
1. அறங்களுக்கு அன்புதான் துணை. அதுவும் குறிப்பாக இல்லறம் என்றால் அன்புதான் அடிப்படை. அறமல்லாதவற்றை மாற்ற, அஃதாவது, மறத்தை மாற்ற வேண்டுமா அதற்கும் அஃதே துணை என்றார்.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. - 76; - அன்புடைமை
2. அவரவர்க்கு விதித்த ஒழுக்கத்தை விரும்பித் தளராமல் காக்க. இல்லையென்றால், அனுபவம் உங்களுக்கு எல்லாவற்றிற்கும் துணை ஒழுக்கம்தான் என்ற அறிவைக் கொடுக்கும்!
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.” --- குறள் 132; அதிகாரம் – ஒழுக்கமுடைமை
3. மூன்றாவது குறள் அருளுடைமையில் வைக்கிறார். பெரியோரே, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு பொருள் இருக்க வேண்டுமா? அருளை ஒழுகுங்கள் என்கிறார்.
நல்லாற்றின் நாடி யருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை. – 242; - அருளுடைமை
மொத்தத் திருக்குறளும் அவ்வளவுதாம். அன்பு, ஒழுக்கம், அருள்.
நல்லாற்றின் நாடி அருள் ஆள்க = அளவைகளாலும் பொருந்தும் வகையாலும் எது நல்ல வழி என்று அதனை நாடி அருளைக் கடைப்பிடியுங்கள்; பல்லாற்றான் தேரினும் அஃதே துணை = ஒன்றை ஒன்று ஒவ்வாத பல சமயங்கள், மதங்கள், வழிகள் போன்றனவற்றை ஆராய்ந்து தேடினாலும் இறுதியில் நமக்குத் துணையாக வருவது அருளே என்று முடிவாகும்.
அளவைகளாலும் பொருந்தும் வகையாலும் எது நல்ல வழி என்று அதனை நாடி அருளைக் கடைப்பிடியுங்கள். ஒன்றை ஒன்று ஒவ்வாத பல சமயங்கள், மதங்கள், வழிகள் போன்றனவற்றை ஆராய்ந்து தேடினாலும் இறுதியில் நமக்குத் துணையாக வருவது அருளே என்று முடிவாகும்.
அளவைகளாவன: காண்டல் அளவை; கருதல் அளவை; உரை அளவை
இவற்றைச் சுருக்கமாக நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 27/07/2021.
பொருந்தும் வகை: பல சமய நெறிகள், மதங்களின் வழிகள், அல்லது வேறு கோட்பாடுகளின் முறைகள் போன்றன வெவ்வேறு பாதையில் பயனிப்பன போலத் தோன்றினாலும், ஆங்கேயும், இறுதியில் அருள் என்ற புள்ளியில் இணையும்.
எனவே, அளவைகளாலும், பொருந்தும் வகையிலும் எப்படி ஆராய்ந்தாலும் அருள் ஒன்றே இந்த வாழ்க்கைக்குத் துணை என்று முடிவாகும்.
அன்பு, ஒழுக்கம், அருள் – இந்த வரிசையும் மிக முக்கியம். முன்பு ஒருமுறை இவற்றைக் குறித்துச் சிந்தித்துள்ளோம். காண்க 30/01/2021.
முதலில் அன்பு. அதற்குப் பிறகுதான் ஒழுக்கம். அன்பில்லாத ஒழுக்கம் அடக்குமுறையாகும். ஒழுக்கத்தின் பின் அருள் தாமாக மலர நாம் வழிவிட்டு மற்றவர்களைப் பயணிக்கவிட வேண்டும். துணையாக இருக்க வேண்டும். அவ்வளவே.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
very Nice linkage of 3 அஃதே துணை. Thirukkurals.