நோக்கினாள் நோக்கெதிர் ... 1082
Updated: Aug 27, 2022
26/08/2022 (545)
அனங்கதேவன் என்றால் மன்மதனைக் குறிக்கும். மார்கழி மாத பாவை நோன்பில் வழிபடுவதும் அனங்கதேவனைத்தான்!
அணங்கு என்றால் தெய்வத்திற்கு ஒப்பான பெண் என்று பொருள்.
அவன்: நேற்று நான் ஒரு அணங்கைப் பார்த்தேன்னு சொன்னேன் இல்லை?
நம்மாளு: ஆமாம், அப்புறம் என்னாச்சு?
அவன்: அவ என்னைத் திரும்பிப்பார்த்தா?
நம்மாளு: பத்திக்கிச்சா?
அவன்: பத்திக்கிச்சாவா? பதறிடுச்சு!
நம்மாளு: என்ன சொல்றீங்க?
அவன்: அவ திரும்பி ஒரு முறை முறைச்சா பாரு. என் கை கால் எல்லாம் நடுங்கிடுச்சு. அவ ஒருத்திதானா? இல்லை, இல்லை. அது எப்படி இருந்தது தெரியுமா? பெரிய படையைக் கொண்டு எதிரி நாட்டைத் தாக்குவது போல இருந்தது தம்பி! நான் என்ன செய்வேன்? நான் என்ன செய்வேன்? (பாரு தம்பி, என் தமிழ்கூட இப்போ சுத்தமாக வருகின்றது.)
“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக் கொண்டு அன்னது உடைத்து.” --- குறள் 1082; அதிகாரம் – தகை அணங்கு உறுத்தல்
நோக்கெதிர் நோக்குதல் நோக்கினாள் = என் பார்வைக்கு எதிர் பார்வை பார்த்தாள்;
தானை = படை
அணங்கு தானைக் கொண்டு தாக்கு அன்னது உடைத்து = (அது) அவள் ஒரு படையைக் கொண்டு தாக்குவது போல இருந்தது.
பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு…
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
