top of page
Search

நாச்செற்று விக்குள்மேல் ... 335

23/01/2024 (1053)

அன்பிற்கினியவர்களுக்கு:

நம் உடல் காற்றால் இயக்கப்படுகிறது. உடலில் இருந்து காற்று நீங்கிவிட்டால் கதை முடிந்தது என்று பொருள்.

காயமே இது பொய்யடா; காற்றடைத்த பையடா என்றார் கடுவெளி சித்தர்.

 

மூச்சை ஆராய்ந்து பல கணக்குச் சொல்கிறார்கள் தமிழ்ச் சித்தர்கள்.

 

மூச்சு ஏறும், இறங்கும். மூக்கின் இரு துவாரங்களிலும் உள்ளே சென்று வெளியே வரும். அந்தக் காற்றின் கணக்கைப் பலரும் அறிவதில்லை. அந்தக் காற்றின் கணக்கைப் பிடிப்பவர்க்குத் தாம் நினக்கும்வரை அழிவில்லை, மரணமில்லை என்கிறார் திருமூலப் பெருமான்.

 

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார் இல்லை

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக்

கூற்றை உதைக்கும் குறியதுவாமே. - பாடல் 571; பிராணாயாமம்; மூன்றாம் தந்திரம்; திருமந்திரம்

 

நம் உடலில் மொத்தம் ஒன்பது துவாரங்கள் அவற்றின் வழியாகக் காற்று உள்சென்று வெளிவரும். நம் தோலும் சுவாசிக்கும். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துவது மூக்கினால் மட்டுமே முடியும் என்பதனால், அந்த மூக்கிற்கு முக்கியத்துவம். இருகாலும் பூரிக்கும் என்பது நம்மால் கட்டுப்படுத்தக் கூடிய இரு துவாரங்கள்.

 

இது மாலை நேரத்து மயக்கம் … என்ற பாடலில் கவியரசு கண்ணதாசன் “ஓட்டை வீடு ஒன்பது வாசல்” என்கிறார்.

 

சரி, இந்தக் கதையெல்லாம் இப்போது ஏன் என்று கேட்கிறிர்கள்! இதோ வருகிறேன்.

உடலில் இருந்து உயிர் பிரியும் முன் நம் சுவாசம் எப்படி மாறும் என்பதை அறிவியல் உலகமும் ஆராய்ந்து கண்டறிந்துள்ளது. இயற்கை மரணங்களின் இறுதிக் காலத்தில் மூச்சினை இழுத்துவிடும் கால இடைவெளி, மூச்சின் அளவு மாறுபடுமாம். அஃதாவது, இயல்பிலிருந்து (rhythm) மாறுபடும். வேக வேகமாக மூச்சை விடுவார்கள். மூக்கின் வழியாக காற்று வெளிவருவது தடைபடும். வாயின் வழியாக வெளியேறும். அதிலும் ஒரு நீண்ட கால இடைவெளி இருக்கும். அந்த இடைவெளி நீளும். இறுதியில் அந்தக் காற்று வெளியே வராது. நாக்குச் செயல் இழந்துவிடும். ஒரு விக்கலோடு அந்த மூச்சு மூக்கின் வழியாகவோ, வாயின் வழியாகவோ வெளிவருவது முற்றுமாக நின்றுவிடும். இவ்வளவுதான் வாழ்க்கை.

 

உடலில் தங்கிய அந்தக் காற்று எவ்வாறு வெளியேறும் என்பதனையும் நம் தமிழ் அறிஞர்கள் ஆராய்ந்துள்ளார்கள். அவற்றை விரித்தால் விரியும் என்றார் ஆசிரியர். இது நிற்க.

மூச்சு அடங்கும் நிலை ஒரு நாள் வரும் என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. அந்த நிலை வராமல் இருக்கும்போதே நல்ல செயல்களைச் செய்யுங்கள் என்கிறார் நம் பேராசான்.

 

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும். – 335; - நிலையாமை

 

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் = நாக்கு காற்றினை வெளியேவிட வழிதராமல், மூச்சுக் காற்று ஒரு விக்கலுடன் உடலின் உள்ளேயே நின்றுவிடும். அந்த நிலை வருவதற்குள்; நல்வினை மேற் சென்று செய்யப்படும் = நல்லச் செயல்களைச் தேடித் தேடிச் செய்தல் வேண்டும்.

 

நாக்கு காற்றினை வெளியேவிட வழிதராமல், மூச்சுக் காற்று ஒரு விக்கலுடன் உடலின் உள்ளேயே நின்றுவிடும். அந்த நிலை வருவதற்குள் நல்லச் செயல்களைச் தேடித் தேடிச் செய்தல் வேண்டும்.

 

செய்துவிடு என்கிறார். செய்ய முயல் என்று சொல்லவில்லை. நேரம் இல்லை. துறவறக் காலத்தில் உள்ளாய். Your days are counted; Therefore, let your steps be measured. உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன. எனவே, உங்கள் அடிகள் அளந்து வைக்கப்படட்டும்.

 

நிலையாமையில் நிலைத்த செயல்களைச் செய்ய நம் பேராசான் காட்டும் முதற் குறிப்பு. கவனம் வைப்போம்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

 

பி.கு: அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்த போது சட்ட சபையில் நிகழ்ந்த ஒரு விவாதம்.  அண்ணா அவர்களுக்கு உயிர் கொல்லி நோய் என்பதை அறிந்த ஓர் எதிர்க்கட்சி உறுப்பினர், அவரை இடித்துரைக்க “Your days are counted” (உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று ஆங்கிலத்தில் இரு பொருள்படும்படிச் சொன்னார்.  அதற்கு அண்ணா அவர்கள் மிகவும் அமைதியாக “But, my steps are measured” (ஆனால், எனது அடிகள் அளந்துதாம் வைக்கப்படுகின்றன) என்றார் உடனே!
Comments


Post: Blog2_Post
bottom of page