top of page
Search

நெடும்புனலுள் ... 495

20/11/2022 (626)

முதலை தண்ணீரில் மிக இயல்பாக தன் பலத்தைக் காட்டி அனைத்தையும் வென்றுவிடும். அதே முதலையார் தண்ணீரைவிட்டு நீங்கி தரைக்கு வந்துவிட்டால் காக்கைகூட அதனைக் கடுப்பு ஏற்றும்!


நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.” --- குறள் 495; அதிகாரம் – இடனறிதல்


புனல் = ஆறு, நீர் நிலை; நெடும்புனல் = ஆழமான ஆறு; முதலை நெடும்புனலுள் (பிற) வெல்லும் = முதலையானது அதிக ஆழமான நீர்நிலைகளுக்குள்ளே பிறவற்றை எளிதில் வெல்லும்;

புனலின் நீங்கின் அதனைப் பிற அடும் = அந்த நீர்நிலைகளை விட்டு அம் முதலை வெளியே வந்துவிடுமானால் எது வேண்டுமானாலும் அதனை வென்றுவிடலாம்.


முதலையானது நீர்நிலைகளுக்குள்ளே பிறவற்றை எளிதில் வெல்லும்;

அந்த நீர்நிலைகளை விட்டு அம் முதலை வெளியே வந்துவிடுமானால் எது வேண்டுமானாலும் அதனை வென்றுவிடலாம்.


ஆசிரியர்: சரி, இந்தக் குறளில் நமது ஐயன் ‘புனல்’ என்று சொல்லியிருந்தாலே போதும். ஏன் ‘நெடும்புனல்’ என்று போட்டிருக்கிறார் தெரியுமா?


நம்மாளு: ங்கே...


ஆசிரியர்: எந்தச் திட்டமிடலிலும் இரண்டு முக்கியமானக் காரணிகள் உண்டு.

(1) MOE - Margin of Error (தவறு வருவதற்குரிய எல்லை); மற்றும்

(2) FOS - Factor of Safety (பாதுகாப்பு காரணி).


“... தவறு என்பது தவறிச் செய்வது;

தப்பு என்பது தெரிந்து செய்வது

...

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...” --- கவிஞர் வாலி, பெற்றால் தான் பிள்ளையா (1966)


திட்டமிடும்போது, அந்த திட்டத்தில் தவறுகளுக்கு வாய்ப்பு ரொம்பவே குறைவாக இருக்கனும். அதாவது, கணக்கு கறாராக இருக்கனும். இதைத்தான் MOE (மார்ஜின் ஆஃப் எர்ரர்) என்கிறார்கள். இது முதல் குறிப்பு.


கல்லணையைக் (Grand Anicut) கட்டிய பெரும் விஞ்ஞானி நம்ம கரிகாலன். அந்த அணை முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கி.பி 1800 களில்அதனை சீர் படுத்தி செப்பனிட்டது Sir Arthur Cotton (சர் ஆர்த்தர் காட்டன்) என்ற பிரித்தானிய ராணுவப் பொறியாளர். இவரின் நினைவாக ஹைதராபாத்தில் (Hyderabad) சிலையும், ராஜமகேந்திரவரம் என்கிற ராஜமுந்திரியில் அவர் பயன்படுத்திய உபகரணங்களையும் மற்றும் பல பொருட்களையும் காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகமும் (Museum) அமைத்துள்ளார்கள். சமயம் ஏற்படுத்திக் கொண்டு சென்றுவர வேண்டும்.


இது நிற்க. அணைகளின் அகலத்தை (breadth) வடிவமைக்கும் போது துல்லியமாக கணக்கிடுவார்கள். அதாவது, MOE குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அதனை இரண்டால் பெருக்கிவிடுவார்கள். உதாரணமாக, வடிவமைப்பின் கணக்குப்படி (design calculation) 50 அடி என்றால், அந்த அணையை 100 அடிக்கு கட்டுவார்கள். இரண்டால் பெருக்குகிறார்களே அதற்குப் பெயர்தான் பாதுகாப்பு காரணி (For dams, the Factor of Safety is from 1.5 to 2).


சரி, இந்தக் கதைக்கும் நம்ம நெடும் புனலுக்கும் என்ன சம்பந்தம்?


FOS தான் இரண்டாம் குறிப்பு!


நம்ம பேராசான் பெரிய விஞ்ஞானி! அவர் என்ன சொல்கிறார் என்றால் முதலையாருக்கு, வெரும் புனலைவிட நெடும் புனல் (மிக ஆழமான ஆறு) மிகவும் சரியான களமாக இருக்கும் என்பதைக் குறிக்கிறார். ஆழமாக இருப்பதனால் பகையை ஆழத்திற்கு அழுத்திச் சென்று மூச்சு திணற வைக்கலாம்! பிடி தளர்ந்தாலும் மீண்டும் பிடித்துவிடலாம்.


அதைப் போல, நாமும் களத்தை தேர்ந்தெடுக்கும்போது MOE மற்றும் FOS இரண்டையுமே கவனிக்க வேண்டும் என்கிறார்.


நம்மாளு: அதற்குத்தான் அவங்க, அவங்க பேட்டையிலே உஷாரா இருக்கனும். சும்மா, ஏரியா விட்டு ஏரியா போய் அலம்பக்கூடாதுன்னு சொல்றாங்கப் போல!


ஆசிரியர்: இது சரிதான். ஆனால், நம் பேராசான் நம்மைத் தாண்டக் கூடாது என்று சொல்லும் போதே, பகையானது அதன் எல்லையைத் தாண்டுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும் என்கிறார்.


பந்து மைதானத்தை விட்டு வெளியே போய்விட்டால், நாம் சும்மா இருந்தாலே போதும் வெற்றிதான். (கிரிக்கெட்டைத்தவிர. அது ஒரு வினோதமான விளையாட்டு. அதை விட்டுவிடுங்கள்)


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.

உங்கள் அன்பு மதிவாணன்




1 Comment


Unknown member
Nov 20, 2022

In Financial markets a term MOS Margin of Safety is very much used may be a combination of MOE plus FOS

Like
Post: Blog2_Post
bottom of page